கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி அவசியம் – பேரவையில் சட்ட முடிவு தாக்கல்
இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்துள்ள விளக்கத்தில், மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர்.
தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட் கூறானது முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது.
எனவே அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.