சட்ட விரோதமாக தப்ப முயன்ற முல்லைத்தீவு பெண் கைது.
இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் என்பவருடை மகள் கஸ்தூரி. இறுதிகட்ட போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கடந்த 2018 ஆம் ஆண்டு விமான மூலம் சென்னை வந்துள்ளார். விசா முடிந்த பின்னரும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு திரும்பி செல்லுவதற்காக இன்று அதிகாலை தனுஸ்கோடியில் இருந்து நாட்டுப் படகு மூலம் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளர்.
அப்போது தனுஸ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகு வந்ததையறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மெரைன் பொலிசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஸ்கோடி அழைத்து வந்தனர்.
கஸ்தூரியிடம் மெரைன் பொலிசார் முதல் கட்ட விசாரணை செய்து பின் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்கின்றனர். எனவே பிடிபட்ட இலங்கை பெண் கஸ்தூரி வெளி நாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தனுஸ்கோடியில் இருந்து சட்டவிரோமாக நாட்டுபடகில் அழைத்து சென்ற முகவரை தேடி வருகின்றனர்.
கஸ்தூரியிடம் இருந்து கடவுச் சீட்டு மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலைய பொலிசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.