100 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டத்தில் ஆலி போப் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 100 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஜாஸ்பிரீத் பும்ரா படைத்துள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது .இந்திய அணி இந்தப் போட்டியில் அபார வெற்றி அடைந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 466 ரன்கள் குவித்தது.
இதன்மூலம், 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து கடைசி நாள் உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் ஹசீப் ஹமீத் (63) விக்கெட்டை முதலில் ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். இதன்பிறகு, ஜாஸ்பிரித் பும்ரா சிறப்பான ஓவர்களை வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நடுங்கச் செய்தார். இதனால், முதலில் ஆலி போப் 2 ரன்களுக்கு பும்ரா பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் யார்க்கர் பந்தில் போல்டானார். இதனால், இங்கிலாந்து கடுமையான நெருக்கடிக்குள்ளானது.
இதில் போப் விக்கெட் பும்ராவின் 100-வது டெஸ்ட் விக்கெட். இந்த மைல்கல்லை அவர் 24-வது டெஸ்ட் ஆட்டத்தில் நிகழ்த்தியுள்ளார்.
இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக, கபில் தேவ் 25-வது டெஸ்ட் ஆட்டத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.