பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்திய திருடனின் புகார்!
திருட்டில் ஈடுபட்ட திருடனை பிடித்து மக்கள் தர்ம அடி கொடுத்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருடன் ஒருவன் போலீசில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரித்தேஷ் ஜெயக்குமார்(18). இவன் சாலையில் செல்லும் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி திருடுவது ரித்தேஷ்ஷின் வழக்கம்.
இதையடுத்து, செப்டம்பர் 2-ம் தேதி பிரதீப் பாட்டீல் என்ற டாக்ஸி டிரைவரிடம் கத்தியைக் காட்டி செல்போன் மற்றும் பர்ஸை பறிக்க முயன்றுள்ளான். ரித்தேஷின் திருட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த டாக்ஸி டிரைவர் ரித்தேஷை வாகனத்தைவிட்டு வெளியில் தள்ளியுள்ளார்.
அதன் பின்னர், திருடன்.. திருடன் எனக் கூச்சலிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். அப்போது அப்பகுதியில் நடந்து சென்றிருக்கொண்டிருந்த பொதுமக்கள் ரித்தேஷை வளைத்தனர்.
பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பிக்க தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு பொதுமக்களை தாக்க முயன்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த சிலர் ரித்தேஷை பிடித்து ஹெல்மெட்டை கொண்டு தாக்கியுள்ளனர்.
அந்தப்பகுதியில் டிராபிக்கானதை பயன்படுத்தி அந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். டாக்ஸி ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் ரித்தேஷை போலீஸார் கைது செய்து திருட்டு மற்றும் பொதுமக்களை தாக்கிய குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன்பின்னர், போலீஸில் ரித்தேஷ் கொடுத்த கம்ப்ளைட் தான் சுவாரஸ்யமானது. நான் திருட சென்ற இடத்தில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரை போலீஸார் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். அவன் அளித்த அந்த புகாரில், “நான் 4 மணியளவில் ரிச்மாண்ட் டவுண் பகுதியில் காரில் அமர்ந்திருந்த ஒருவரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பர்ஸை திருடினேன்.
ஆனால் அந்த நபர் எனது பிடியில் இருந்து விலகி உதவிக்கேட்டு சத்தம்போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு 30- 40 பேர் என்னை சூழ்ந்துக்கொண்டு தாக்கினர்.
இதில் எனக்கு தலை, உதடு, கை மற்றும் கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. என்னை தாக்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளான்.
இதனிடையே, திருடன் கொடுத்த புகார் கொடுத்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ஒருவர் புகார் கொடுத்தால் இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை (எஃப் ஐ ஆர்) பதிவு செய்வது என்பது காவல்துறையினரின் கடமை.
குற்றவாளிகளை பிடிக்க நாங்கள் பொதுமக்களின் உதவியை நாடுகிறோம். அதேவேளையில் பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுகொள்கிறோம்” என்றனர்.