கினியாவில் இராணுவ சதிப்புரட்சி: ஜனாதிபதி கைது.
கினியாவில் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் சிறப்புப் படையினர் அந்நாட்டு ஜனாதிபதியை கைதுசெய்து காலவரையற்ற ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளனர்.
‘ஜனாதிபதியை கைது செய்த பின் அரசியலமைப்பை ரத்துச் செய்ய நாம் முடிவு செய்துள்ளோம்’ என்று இராணுவ சீருடை அணிந்து கையில் துப்பாக்கியை ஏந்திய ஒருவரின் வீடியோ அறிவிப்பு ஒன்று ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
கினியாவின் நிலம் மற்றும் வான் எல்லைகள் மூடப்பட்டதாகவும் அரசாங்கம் கலைக்கப்பட்டு விட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெளியான வீடியோ ஒன்றில் 83 வயதான ஜனாதிபதி அல்பா கொன்டே இருக்கையில் அமர்ந்திருக்க அவரை சூழ்ந்து இராணுவத்தினர் இருப்பது தெரிகிறது. இதன்போதும் தாம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக இராணுவ வீரர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. நாட்டின் அளுநர்கள் மற்றும் ஏனைய உயர் பதவிகளுக்கு இராணுவத்தினர் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கினியாவில் குறிப்பிடத்தக்க கனிம வளம் இருந்தபோதும் உலகின் வறிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இங்கு நீண்ட காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில் சிறப்புப் படையின் சிரேஷ்ட கொமாண்டோ ஒருவரை பதவி நீக்கம் செய்ததை அடுத்தே தற்போதை பதற்றம் ஆரம்பித்திருப்பதாக கினியாவில் இருக்கும் மேற்கத்தேய இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தவறான நிர்வாகமே இராணுவ சதிப்புரட்சியை தூண்டியதாக அரச தொலைக்காட்சியில் தோன்றிய சிறப்புப் படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் மமடி டும்பாயோ தெரிவித்தார்.
ஐ.நா செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டரஸ் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம், இந்த இராணுவ சதிப்புரட்சியை கண்டித்திருப்பதோடு ஜனாதிபதி கொன்டேவை உடன் விடுவிக்கும்படி கோரியுள்ளார்.
இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கினியாவின் மீதான அமெரிக்காவின் ஆதரவு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
தம்முடைய பதவியை சரிவர செய்யாவிட்டால் இதுதான் தண்டனை…