தேச பக்தர்கள் ஆடையின்றி ஆடுகிறார்கள் : உபுல் ஜோசப் பெர்னாண்டோ

“பிலிப் குணவர்த்தனாவும்,1956 புரட்சியும்” எனும் புத்தகத்தில் அந்த நேரத்தில் பிலிப் குணவர்த்தனா சொன்ன ஒரு அற்புதமான கதை உள்ளது.

1956 இல் பண்டாரநாயக்கவின் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திலிருந்து பிலிப் வெளியேறுவதற்கு முன்பு, பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கத்துக்குள் ஒரு சதி நடந்து கொண்டிருந்தது என்றும், இந்த சதி அமெரிக்க தூதரின் வீட்டில் திட்டமிடப்பட்டதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது.

பிலிப் குணவர்தன, பண்டாரநாயக்க அரசில் , விவசாய அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை.  ஆனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில் பண்டாரநாயக்கவின் அமைச்சரவை, பிலிப் குணவர்தன கொண்டு வந்த வயல்கள் குறித்த மசோதாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியது. இறுதியாக பிலிப் அமைச்சரவையிலிருந்து அகற்றப்படும் வரை அவர்கள் அமைச்சரவையைப் புறக்கணித்தனர். இறுதியில் பிலிப்புக்கு அரசை விட்டு வெளியே செல்வதைத் தவிர வேறு வழியில்லாது போனது. பிலிப் அரசை விட்டு வெளியேறிய பின்னர் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார்.
தற்போதைய அரச அமைச்சர் , தினேஷ் குணவர்தன என்பது பிலிப்பின் மகன். 2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டா, பிலிப்பின் மகனை வெளியுறவு அமைச்சராக நியமித்த வேளையில் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் 2019 கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவந்த தேசபக்தர்கள் அது குறித்து மகிழ்ச்சியாக இருந்தனர். காரணம், பிலிப் வெளியுறவு அமைச்சராக இருக்கும் வரை, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா அல்லது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு பிரச்சனை கொடுக்க மாட்டார்கள் என நினைத்துக் கொண்டு அவர்கள் மகிழ்ந்திருக்கலாம்.

தினேஷும் அதை செயலில் காட்டினார். ட்ரம்பின் அரசாங்கத்திற்கான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தபோது, ​​தினேஷ் அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு ஓடவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் , மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக வெளியுறவு அமைச்சரான தினேஷ் பேசியபோது தேசபக்தர்கள் ஆரவாரம் செய்தனர். தினேஷுக்கு ஆதரவான சுவரொட்டிகள் கூட ஒட்டப்பட்டன.
எனினும், தினேஷ் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோதே, ​​அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் , கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க தூதரின் வீட்டிற்குச் சென்று , அமெரிக்க தூதரை சந்தித்தனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அடுத்த கூட்டத்திற்கு முன் , இருதரப்புக்கும் இடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அமெரிக்க தூதரின் தலையீட்டோடு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன என ஊடகங்களில் செய்திகள் வந்தன.

இச் சந்திப்பிற்குப் பின்னர், சுமந்திரன் ஊடகங்களிடம் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீடு எதிர்பார்க்கப்படுகிறது என்றார். அமெரிக்க தூதரின் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது தினேஷ் வெளியுறவு அமைச்சராகத்தான் இருந்தார். இந்த விவாதங்களைப் பற்றி முன்னரே அவருக்கு ஏதாவது தெரிந்திருந்ததா என தெரியவில்லை.

அதே நேரத்தில், அரச அமைச்சரவை மாற்றம் பற்றிய வதந்திகள் பரவின. அமைச்சரவை மாற்றத்தின் போது தினேஷின் வெளியுறவுத் துறையில் மாற்றம் வருமா என ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, ​​தினேஷ் , “இந்த அரசாங்கத்தில் அத்தகைய மாற்றம் நடைபெறாது” என்றார்.

ஆனால் தினேஷின் அமைச்சர் பதவி மாறியது.

அதன் பின் , அமெரிக்க தூதுவர் வீட்டில் சுமந்திரனை சந்தித்த , ஜீஎல். பீரிஸ் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கிறார். தினேஷ் வெளியேறியவுடன், இந்தியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியைத் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிலிந்த மொரகொட இந்தியாவுக்குப் புறப்பட்டார். ஜி.எல். வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் , அவர் சந்தித்த தூதுவர்களில் நோர்வே தூதுவர் முக்கிய இடத்தை பெறுகிறார்.

“ரணிலின் 2002 போர்நிறுத்தம் போன்ற ஒன்று மீண்டும் வருமா?”

ஜி.எல். மற்றும் மிலிந்த என்போர் ரணில் மற்றும் பிரபாகரனின் 2002 போர் நிறுத்தத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களாக செயல்பட்டவர்கள் ஆவார்கள்.

ரணில் போர்நிறுத்தத்தை அறிவித்த பின் , விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஜி.எல். மற்றும் மிலிந்தவைத்தான் ரணில் அனுப்பி வைத்தார்.

அந்நேரம் ஜேவிபியை பிரதிநிதித்துவப்படுத்திய விமல் வீரவன்ச மற்றும் தேசபக்தி தேசிய இயக்கத்தின் முதல் எதிரிகளாக , ஜீஎல் பீரிஸ் மற்றும் மிலிந்த ஆகியோர் வசைபாடப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் எதிராக நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

ஜீ.எல். மற்றும் மிலிந்த , இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திய இரண்டு சிறந்த இராஜதந்திரிகளாக இருந்தனர்.  ஜீஎல் பீரிஸோடு , நோர்வே தூதுவருக்கு இருந்த நெருங்கிய உறவின் காரணமாகவே நோர்வே இலங்கையில் தலையிட்டது.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஜீஎல் , ​​நோர்வேயை கையாண்டபோது, ​​மிலிந்த அப்போதைய எதிர்க்கட்சியான யூஎன்பி சார்பாக நோர்வேயுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தார். இறுதியில், இருவரும் சேர்ந்து சந்திரிகாவின் அரசை கவிழ்க்க ஒன்றிணைந்தனர். அப்போது ஜீஎல், விடுதலைப் புலிகளின் கோட்பாட்டாளரான பாலசிங்கத்துடன் கலந்துரையாடி புலிகளை, பெடரல் தீர்வு ஒன்றுக்கு வர சம்மதிக்க வைத்தார். அது ஒஸ்லோ ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.

மிலிந்த, ரணில் மற்றும் பிரபாகரன் ஆகியோர் வடகிழக்கு அரசாங்கங்களுக்காக சர்வதேச சமூகத்திடமிருந்து ஒரு பெரிய தொகையை பெற்றனர். ஆனால் 2005 இல் ரணில் தோல்வியடைந்த பிறகு, ஜி.எல் மற்றும் மிலிந்த , மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டனர்.

2005 முதல் 2015 வரை மகிந்தவின் அரசில் , ஜீ.எல்.,  பசிலுடன் நெருக்கமாக பணியாற்றினார். மிலிந்த, கோட்டாபயவுடன் பணிபுரிந்தார்.

இப்போது கோட்டா ஜனாதிபதியாக உள்ளார். பசில் நிதி அமைச்சராக உள்ளார். ஜி.எல். மிலிந்த ஆகியோரை பாவித்து , அவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் நோர்வேயுடன் நட்பு கொள்வதற்கான வழிகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம். அவர்கள் இருவரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் , சந்திரிகாவும் கூட இப்படி நினைத்த காலம் ஒன்று இருந்தது.

1977 ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்., அன்றைய இந்தியாவுடன் கடுமையாக மோதினார். அதன் விளைவுதான் பிரபாகரன் போன்றோருக்கு இந்தியா ஆதரவளிக்க காரணமானது. இறுதியில், பிரபாகரனை முடிக்க முடியாத JR , இந்தியாவின் காலடியில் விழுந்தார்.

இந்தியாவும் , JRக்கு ஒரு அற்புதமான மருந்தை அரைத்து கொடுத்தது. பிரபாகரனை அழிப்பதற்கு என்றால் , இந்திய துருப்புக்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றும்,  மாகாண சபை முறையை அமைத்து , திருகோணமலை துறைமுகம் மற்றும் அங்குள்ள எண்ணெய் குதங்கள் தொடர்பாக இலங்கை , இந்தியாவுக்கு ஆதரவான உடன்பாடொன்றுக்கு  ஒத்து வர வேண்டும் எனவும் இந்தியா சொன்னது.

இந்தியா தனது பொக்கட்டில்தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்த , திருமதி பண்டாரநாயக்கவிற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என அவ்வேளை ஜே.ஆர் நினைத்தார். ஆனால் இந்தியா ஏமாறவில்லை.

இந்தியாவுக்கு எதிரான ஜே.ஆரே  ,  இலங்கையில் உருவாக்கிய தேசபக்தி அலையை , ஜேஆருக்கு எதிராகவே பயன்படுத்த வேண்டுமானால், ஜேஆரோடு நெருக்கமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என இந்தியா நினைத்தது.

ஜே.ஆர்.உருவாக்கிய இந்திய எதிர்ப்பு அலை , ஜேவிபியின் கைக்கு மாறியது.

இறுதியில், ஜேஆர் , இலங்கை வரலாற்றில் மிகவும் விரும்பப்படாத தலைவராக வீட்டிற்கு செல்ல வேண்டி வந்தது. ஜேஆருக்குப் பின்னர் , ஜனாதிபதி பிரேமதாச ஜேவிபியை அழித்த போதிலும், ஜேவிபியின் புதிய தலைவரான சோமவங்ச அமரசிங்க, அமெரிக்க ஆதரவோடு பாதுகாப்பாக நாடு கடந்து செல்ல , இந்தியாவும் உதவியது. இந்தியாவை எதிர்த்த ஜேவிபி தலைவர் , இந்தியா வழியாகவே வெளிநாடு சென்றார்.

2002 இல் ரணில் மற்றும் பிரபா இடையேயான போர் நிறுத்தத்திற்கு எதிரான ஒரு தேசபக்தி அலையை உருவாக்கியது சந்திரிக்கா, மங்கள மற்றும் ஜேவிபி ஆகும். மங்கள மற்றும் விமல் ஆகியோர் போர்நிறுத்த எதிர்ப்பில் இரண்டு பெரும் கதாபாத்திரங்களாக செயல்பட்டனர்.

அந்த பெரும் அமெரிக்க – நோர்வே எதிர்ப்பு தேசபக்தி அலை,  ரணிலின் அரசை நிலை குலைய வைத்தது. மங்கள மற்றும் விமலின் செல்வாக்கின் கீழ் சந்திரிக்கா , ரணிலின் அரசாங்கத்தின் அமைச்சுகளை பறித்துக் கொண்டு ரணிலின் அரசாங்கத்தை கலைத்தார். போர் நிறுத்தம் பாதிக்கப்பட்டது.

ரணிலின் அரசாங்கம்,  பிரபாகரனுடன் உருவாக்க நினைத்த இடைக்கால அரசுக்கு என பெறப்பட்ட டாலர் பையை சந்திரிகா கைப்பற்ற நினைத்தார். அடுத்ததாக , சர்வதேச சமூகத்திற்கு முன் சந்திரிகாவும் மண்டியிட்டார்.

அந்த பண பொதியை பெற வேண்டுமானால் , சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்கை மீள் கட்டியமைக்க என சுனாமி நிவாரண வாரியம் ஒன்றை உருவாக்கி பிரபாகரனின் கையெழுத்துடன் ஒப்புதலை பெற வேண்டுமென அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் கோரியது. சந்திரிகா அதற்கும் ஒப்புக்கொண்டார்.

ரணிலின் போர் நிறுத்தத்திற்கு எதிராக சந்திரிகா உருவாக்கிய தேசபக்தி புலி எதிர்ப்பு அலை, அப்போது சந்திரிகாவுக்கு எதிராக திசை திரும்பியது.  தவிர, மங்களாவும் அந்த தேசபக்தி அலையில் சேர்ந்து சந்திரிகாவை எதிர்த்தார். சந்திரிகாவுக்கும் மக்களின் எதிர்ப்போடு வீட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று.

ராஜபக்சமார், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவுடன் நட்பு கொள்ளும்போது எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால், அவர்களும் தவறு செய்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா இப்போது மகிழ்ச்சியில் உள்ளன.

இன்று, அமெரிக்கத் தூதரின் வீட்டில் அரசாங்கம் , சுமந்திரனுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தும்போது, ​​மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் , அவர்களைத் தாக்கிய விமல், உதய கம்மன்பில மற்றும் தினேஷ் ஆகியோர் இப்போது தங்கள் , தலைகளை மறைத்துக் கொண்டு ஒழித்து திரிகிறார்கள்.

​​”நான் உன்னை அப்போது எதிரி அலீனாவாக பார்த்தேன் … இன்று நான் உன்னை அலீனா கடவுளாக பார்க்கிறேன்” என சுனில் பெரேராவின் ஜிப்சிஸ் பாடலை அரசாங்கம் இப்போது பாடும்போது, தேசபக்தர்கள் அனைவரும் , ஆடைகள் இல்லாமல் நடனம் ஆடுகிறார்கள்.

1987 ல் JRம் இந்தப் பாடலை அன்று குசியாக பாடினார்.

2005ல் சந்திரிகாவும் இந்தப் பாடலை குசியாக பாடினார்.

ஆனால் இவர்கள் அனைவரும் துண்டைக் காணோம் , துணியைக் காணோம் என வீட்டிற்கு துரத்தப்பட்டனர்.

– உபுல் ஜோசப் பெர்னாண்டோ

தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.