கேரளாவில் தளர்த்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு – முதலமைச்சர் பினராயி விஜயன்
அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்தைக் கடந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகச் சற்று குறைந்துள்ள நிலையில், அங்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகிய இரு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் மாதம் இறுதி வரை கேரளா பயணங்களை மக்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 26,701 பேருக்கு கொரோனா உறுதியானது. அதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை 19,688 பேருக்கு கொரோனா உறுதியானது. அடுத்த 24 மணிநேரத்தில் 25,772 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை தளர்த்தப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதேபோல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4 முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்துள்ள பினராயி விஜயன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் முக்கியம் என்பதால், ஆசிரியர்கள் இந்த வாரத்திற்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவலுடன், நிபா வைரசும் பரவ தொடங்கியுள்ளது. இதனால், கேரளாவில் அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கேரளாவில் இருந்து வருபவர்களை கட்டாயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கர்நாடக அரசு காய்ச்சல், மனநிலை, தீவிரமான சோர்வு, தலைவலி, மூச்சுத்திணறல், இருமல், வாந்தி-பேதி, உடல் வலி, மூளைக்காய்ச்சல் ஆகிய பிரச்சினைகள் உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து உரிய பாதுகாப்புடன் ரத்த மாதிரிகளை சேகரித்து புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.இந்நிலையில், அக்டோபர் மாதம் இறுதி வரை கேரளா பயணங்களை மக்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகளவில் இருப்பதால், அவசர காரணங்கள் இல்லையெனில் பயணங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.