எமக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் அதிபர், ஆசிரியர்கள் கூட்டாகத் தெரிவிப்பு.
“எமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடும் வரையில் எமது போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும்.”
இவ்வாறு அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தெரிவித்தன.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம் நேற்று 59 நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தமது தொழிற்சங்கப் போராட்டத்தால் மரணவர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்துக்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதியுடனும், நிதி அமைச்சருடனும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு தொடர்ந்தும் கோரி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பல அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றில் முறையான தீர்வு எட்டப்படவில்லை. இதனால் மாணவர்களே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேலும் கூறினார்.