எம்.ஜி.ஆருக்காக பாடல் எழுதி அறிமுகமான புலமைப்பித்தன் மறைந்தார்
அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் (வயது 86) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தவர் புலமைப்பித்தன். 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார். அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நான் யார்? நான் யார்? என்ற பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.
எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன்.