வவுனியா – சாந்தசோலை கிராமம் அபாய கட்டத்தில்! – 43 பேருக்குக் கொரோனா.
வவுனியா, சாந்தசோலை கிராமம் கொரோனாத் தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கொரோனாத் தொற்று அபாயம் இருக்கின்றது எனக் கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சுகாதாரப் பிரிவினரால் கடந்த சனிக்கிழமை சாந்தசோலை கிராமத்தில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி, நோய் அறிகுறி காணப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. அதில் 31 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கிராமத்தில் 43 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா அபாயமுள்ள கிராமாக குறித்த கிராமம் காணப்படுவதால் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.