விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்திய ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது.

சேலம் தாசநாயக்கன்பட்டி அருகே உள்ள இரும்புதலை ஏட்டுகாடு பகுதியைச் சேர்ந்த செல்வா என்கிற செந்தில்குமார் ஐந்து ரோடு பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் 17.8.2021 அன்று அழகாபுரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் இருவரை மீட்டுள்ளனர்.
இதேபோல, பூமிநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகாதேவி என்பவர் ரெட்டியூர் திருமால் நகரில் உள்ள ஒரு விட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் 19.8.2021 அன்று அழகாபுரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம்சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவரை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், குமாரசாமிபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சேலம் அழகாபுரம் புவனேஸ்வரி நகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்குஎடுத்து விபச்சாரத் தொழில் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் 19-08-2021 அன்று அழகாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் நால்வரை மீட்டுள்ளனர்.
சேலம், அம்மாப்பேட்டை மாரிமுத்து முதலி தெருவைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அங்கு வரும் ஆண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று விபச்சார தொழில் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் 21.8.2021 அன்று பள்ளப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று ஞானவேலை கைது செய்து விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவரை மீட்டுள்ளனர்.
மேலும், கன்னங்குறிச்சி எல்.பி.செட்டி தெருவைச் சேர்ந்த சைமன் என்பவர் சேலம் ஏரோடு சரஸ்வதி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தொழில் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் 22.8.2021 அன்று அழகாபுரம் போலீஸார்வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் இருவரை மீட்டுள்ளனர்.
கார்த்திகாதேவி, ராஜ்குமார், ஞானவேல், சைமன் மற்றும் செல்வா என்கிற செந்தில்குமார் ஆகியோர் அப்பாவி பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தியும் தனக்கு உடன்படாத பெண்களை துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டும் ஆண்களை விபச்சாரத்திற்காக அழைத்த குற்றத்தையும் செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், தொடர்ந்து பொது மக்களின் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டபடியால், அழகாபுரம் மற்றும் பள்ளப்பட்டி காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பேரில், சேலம் மாநகர துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மோகன்ராஜ் சிபாரிசினை சேலம் மாநகரகாவல் ஆணையாளர் நஜ்முல் ஹோாதா பரிசீலித்து ஐந்து பேரையும் “விபச்சாரத் தொழில் குற்றவாளி” என்ற பிரிவில் குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்க ஆணை பிறப்பித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கார்த்திகா தேவி கோவை பெண்களுக்கான தனி சிறைச்சாலையிலும், மற்ற நான்கு நபர்கள் மத்தியசிறையிலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.