மலையக தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலித்தொழிலாளர்களாகவே வைக்க முயற்சி : மனோ
பால் உற்பத்தி செய்ய 31 பால் பண்ணைகள் அரசின் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கையில், அவற்றை அபிவிருத்தி செய்யாமல், பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மலைத்தோட்ட காணிகளை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, கொடுக்க அரசாங்கம் முயல்கிறது என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நாவலபிட்டிய கலபொடவத்த தோட்டம், கண்டி அந்தானை பகுதியை சேர்ந்த தெல்தொட்ட தோட்டம், க்றேவ் வெலி தோட்டம் மற்றும் வட்டவளை மவுன்ட் ஜின் தோட்டம் ஆகியவற்றில் சுமார் 1,100 ஏக்கர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
இந்த தோட்டங்களை உருவாக்கி நூறாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக அங்கு வாழும் தொழிலாளர்களை உள்வாங்கி, அவர்களுக்கு காணிகள் வழங்கி, பசுமாட்டு வளர்ப்புக்கு உதவி செய்து, வீட்டு பண்ணை அடிப்படையில், பால் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் மறுக்கிறது.
இதே போன்ற தோட்ட காணிகள் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டு வெளியாருக்கு மாத்திரம் கொடுக்கப்படும் முயற்சிகள் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் ஆரம்பமாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக மலையக தொழிலாளர்களை இன்னமும் நூறு வருடங்களுக்கு கூலித்தொழிலாளர்களாகவே வைக்கும் முயற்சியை இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது. இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாய் மூடி மௌனியாக துணை போகிறது. இதற்கு நாம் இடம் கொடுக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற தமுகூ ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
பால் பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு பால் உற்பத்தி பெருக வேண்டும். இந்நாட்டில் பாலாறு, தேனாறு ஓட வேண்டும். இவற்றுக்கு நாம் இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவு வழங்குவோம். ஆனால், இருக்கும் பால்பண்ணைகளை அபிவிருத்தி செய்யாமல், புதிய பண்ணைகளை அமைக்கிறோம் என்ற போர்வையில், மலைக்காணிகளை அபகரித்து, நமது மக்களை நடுத்தெருவில் நிறுத்த இடம் கொடுக்க முடியாது.
காணிகளை பிரித்து, நமது மக்களுக்கும் வழங்குங்கள். கிராமத்து மக்களுக்கும் வழங்குங்கள். பசு மாடுகள் பெற கடன் உதவி செய்யுங்கள். நமது மக்கள் மிக சிறந்த உழைப்பாளிகள். வீட்டு பால் பண்ணைகளை நடத்தி உங்களுக்கு பால் தருவார்கள். இதன் மூலம் அவர்களது வருமானமும் அதிகரிக்கும். பால் உற்பத்தியும் அதிகரிக்கும். நாடும் செழிக்கும். உலகில் இன்று பால் உற்பத்தி இப்படி சிறு பால் விவசாயிகளால்தான் வளர்க்கப்படுகிறது.
நீங்கள் அடையாளம் கண்டுள்ள அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மலைக்காணிகள், பால் பண்ணை நடத்த அல்ல, வேறு நடவடிக்கைகளுக்கு பயன்பட போகிறது என எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் உள்நோக்கம் மலைநாட்டு தொழிலாளருக்கு மட்டுமல்ல, இந்நாட்டின் சுற்று சூழல் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் என எமக்கு தெரிய வந்துள்ளது.
இந்த பகுதிகளில் ஏற்கனவே மாணிக்க கல் தோண்டும் நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அவற்றை முழுமையாக்கவா இந்த நடவடிக்கை என நாம் கேட்கிறோம். இதனால், இந்த மலைகளில் இயற்கைக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகள் நாட்டின் நீர்பிடிப்பு பிரதேசங்களை பாதிக்கும். மகாவலி கங்கையின் ஆரம்பம் இங்கே என்பதை மறக்காதீர்கள்.
மலையக தொழிலாளரின் வாழ்வாதாரத்துக்கு புதிய நவீன வழி காட்டாமல், மலையக தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலிகளாகவே வைத்துக்கொண்டு, மலையக சுற்று சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இதுபற்றி, இதொகா என்ற அமைப்புக்கு தெரியாதா? இவர்களுக்கு தங்கள் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாதா? மலையக காணிகளை இப்படி அடாத்தாக பறிக்க இடம் கொடுத்தால், எமது சமூகம் இன்னமும் நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து கூலி தொழிலாளர்களாகவே வாழ வேண்டி வரும் என்பது புரியவில்லையா?