டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி.
டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயன் மார்கன் தலைமையிலான அணியில் பிரபல வீரர் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. மனநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து விளையாட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இவர் கடைசியாக 2017-ல் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார். அணியில் ஆர்ச்சர் இல்லாததால் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசும் மில்ஸ் தேர்வாகியுள்ளார்.
டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 2016 டி20 உலகக் கோப்பையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 2021 டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23 அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது.
இங்கிலாந்து அணி: இயன் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.