டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி.
டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அணியில் பிரபல வீரர்களான டு பிளெஸ்சிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மாரிஸ் ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை.
கடந்த டிசம்பரிலிருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் டு பிளெஸ்சிஸ் விளையாடவில்லை. 2019 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டியிலிருந்து தாஹிர் ஓய்வு பெற்றார். கிறிஸ் மாரிஸ் கடந்த இரண்டு வருடங்களாக தெ.ஆ. அணியில் விளையாடவில்லை. உலகக் கோப்பைக்கான தெ. ஆ. அணியில் ஷம்சி உள்பட மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
தென்னாப்பிரிக்க அணி: பவுமா (கேப்டன்), டி காக், மார்க்ரம், டேவிட் மில்லர், ரபாடா, ஷம்சி, பியான் ஃபோர்டைன், வியான் முல்டர், வாண் டர் டுசென், ஹெண்ட்ரிக்ஸ், என்கிடி, கிளாசென், அன்ரிச் நார்கியா, கேசவ் மஹாராஜ், பிரெடோரியஸ்.
மாற்று வீரர்கள்: ஜார்ஜ் லிண்டே, பெலுக்வாயோ, லிஸாட் வில்லியம்ஸ்.