இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒரு நபருக்கு பாதிப்பு.
ரவி சாஸ்திரி உள்பட மூன்று பயிற்சியாளர்களுக்கு அடுத்ததாக இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒரு நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5-வது டெஸ்ட் நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் பயிற்சி இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட மூன்று பயிற்சியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. இதையடுத்து மூவரும் மருத்துவச் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பிசியோதெரபிஸ்ட் நிதின் படேலுக்கு கரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவதால் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகிய மூவரும் மான்செஸ்டர் டெஸ்டில் பங்கேற்க மாட்டார்கள்.
இந்நிலையில் நேற்றிரவு மாலை இந்திய அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதையடுத்து இந்திய அணியினரின் இன்றைய பயிற்சி ரத்தாகியுள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் தங்கும் விடுதியில் தொடர்ந்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்திய அணி குழுவில் உள்ள ஒருவருக்கு கரோனா உறுதியானதால் இன்று இந்திய அணியைச் சேர்ந்த அனைவரும் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்கள். இதன் முடிவு வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். இதனால் 5-வது டெஸ்ட் திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணி வீரர்களில் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது செப்டம்பர் 19 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. 5-வது டெஸ்ட் முடிந்த பிறகு ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 15 அன்று மான்செஸ்டரிலிருந்து துபைக்கு இந்திய வீரர்கள் செல்லவுள்ளார்கள்.