கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு மின்தகன மயானம் அமைக்க அனுமதி!
வடக்கு மாகாணத்தில் ஆறு மின்தகன மயானங்கள் அமைப்பதற்கான அனுமதியினை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக்டிரஞ்சன் அவர்கள் வழங்கியுள்ளார்.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு, நல்லூர் பிரதேச சபைகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபைக்கும், மன்னார் நகர சபைக்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கில் கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி வழங்கியபோதும் இதற்காக நிதி வல்லமை மற்றும் திட்டவிருப்பம் இருந்தால் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது:
சபையின் நிதியியல் வைப்பு உள்ளதாகவும் அதனைப் பயன்படுத்த எதிர்வரும் 16ம் திகதி சபை அமர்வில் பிரேரணை முன்வைக்கப்பட்டு, உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதியினை எடுத்து மின்தகன மயானம் அமைக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கான இடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் அரசாங்க அதிபர் தலைமையில் களவிஜயம் ஊடாக மின்தகன மயானம் அமைக்க இடம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.