யாழ்.மக்களிடம் பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள்.
“நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழலில் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலையும் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம்.”
இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட மக்களிடம் கேட்டுக்கொண்டார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகக் குரல் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததையடுத்து அவரது மரணவீட்டுக்கு அதிகளவானோர் சென்றிருந்தனர்.
குறித்த நபரின் திடீர் மரணம் உளவியல் ரீதியிலான தாக்கத்தை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. சிறந்த முறையில் வாழ்ந்து மரணித்தவராக அவர் அந்தப் பிரதேசத்தில் மதிக்கப்படுகின்றார்.
பிரதேச மக்களுடன் நல்லுறவைப் பேணி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவரது மரண வீட்டுக்கு அதிகளவானோர் சென்றுள்ளனர் என்பது பொலிஸ் தரப்பு கருத்தாக உள்ளது.
குறித்த நபருக்கு நாமும் கௌரவமளிக்க வேண்டும். அதேபோன்று மற்றுமொரு சம்பவம் பதிவாகியிருந்தது.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்கச் சூழலைக் கருத்தில்கொண்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இது உண்மையில் மனிதாபிமான ரீதியான செயற்பாடு. ஏனெனில், சமூகசேவகர் என்ற ரீதியில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் உதவுவதற்காக முன்னின்று அவர் செயற்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நாம் கௌரவமளிக்க வேண்டும்.
இவ்விரு சந்தர்ப்பங்களுக்கும் முதலில் நாம் மதிப்பளிக்க வேண்டும். எனினும், நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் உள்ளது.
தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்றும் மிகவும் பயங்கரமான நோய்த்தொற்று மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.
நோய்த்தொற்றுக் காவிகளாக மக்களே உள்ளனர். எனவே, இந்தத் தொற்றானது ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்குப் பரவக்கூடும்.
அதேபோன்று ஒருவருக்குத் தொற்றுப் பரவினால் அவரது குடும்பத்தினர், அயலவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிப்பை எதிர்கொள்வர்.
எனவே, சமூகத்தில் சிறந்த முறையில் வாழ்ந்து மரணித்த நபருக்கு நாம் கௌரவமளிக்கின்றோம். எனினும், அந்த நபரின் மரணவீட்டில் பங்கேற்பதால் தொற்றுப் பரவல் அதிகரிப்பதுடன் மற்றுமொருவரின் மரணத்துக்கும் அது காரணமாகின்றது. எனவே, இவ்விடயமானது உயிரிழந்த நபரை அவமதிப்பவதாக அமைந்துவிடும்.
அதேபோன்று நிதி பகிர்ந்தளிக்கும் விடயத்தை எடுத்துக்கொண்டால் நிதி பகிர்ந்தளிக்கும் நபர் மனிதாபிமான ரீதியில் நடந்துகொண்டாலும் அந்த இடத்தில் நோய்த் தொற்றுப் பரவுவவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வந்தவரினூடாகப் பணத்தைப் பெறுவதற்கு வராத ஒருவர் பாதிக்கப்படக்கூடும்.
இவ்வாறான மனிதாபிமானச் செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை நடைமுறைப்படுத்த நேர்ந்தால் அது எமக்கும் வருத்தமளிக்கின்றது.
எனினும், சட்டஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது எமது பொறுப்பு.
எனவே, சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாம் மக்களைக் கோருகின்றோம்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறே நாம் பொதுமக்களைக் கோருகின்றோம்” – என்றார்.