சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலையை திறந்து விற்பனை செய்தவர்கள் கைது!
கடவத்த பிரதேசத்தில், நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலையை சட்டவிரோதமாகத் திறந்து சீனியை விற்பனை செய்த மூவரை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த களஞ்சியசாலையில் பணியாற்றிவரும் பணியாளர்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 10 இலட்சத்து 530 ரூபா பெறுமதியான சீனியையையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பரக்கந்தெனிய – இம்புல்கொட, எலக்கந்த – வத்தளை, வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34, 32, 27 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் அதிகார சபையின் கம்பஹா பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரஞ்சித் தலைமையிலான குழுவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 26 வெலிக்கடை எந்தேரமுல்ல பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலையை திறந்தே சீனி விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 4 ஆயிரத்து 100 தொன் சீனிகளையும், லொறி ஒன்றையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்னர்.
சந்தேகநபர்கள் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.