தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி புதைக்கப்பட்ட நபரின் சடலம் தோண்டி எடுப்பு.
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி புத்தளம் வெப்பமடுவ பொதுமயானத்தில் புதைக்கப்பட்ட 56 வயது நபரின் சடலம், புத்தளம் நீதவான் முன்னிலையில் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டது.
குறித்த நபர் கடந்த 4ஆம் திகதி அவரது வீட்டில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி அன்னைறய தினமே வெப்பமடுவ பொதுமயானத்தில் புதைக்கப்பட்டது.
குறித்த நபர் மரணமடைந்த இரண்டு தினங்களின் பின்னர், அவரது மகள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மனைவியும் உடல்நலக் குறைபாடு காரணமாக வீட்டில் மரணமடைந்த நிலையில், அவரது சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டது. குறித்த இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தமை பி.சி.ஆர். பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸாருக்கு அறிவிக்காது புதைக்கப்பட்ட நபர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகின்றது எனப் புத்தளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டையடுத்து புத்தளம் பொலிஸார் இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றதுடன், சடலத்தை மீண்டும் தோண்டி எடுப்பதற்கும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினர்.
இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதையடுத்து, புத்தளம் நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
மிகவும் இரகசியமான முறையில் குறித்த நபரின் இறுதிக்கிரியையில் பங்கேற்ற 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.