கொரோனா நோயாளர்கள் வீட்டில் மரணிப்பதைத் தடுக்க நடவடிக்கை சுகாதார அமைச்சு தெரிவிப்பு.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் மரணமடைவதைத் தடுப்பதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வீட்டில் ஏற்படும் கொரோனா இறப்புகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்த கேள்விக்கு ஊடகங்களிடம் பதிலளிக்கும் விதமாகமே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் இறக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, அனைத்து கொரோனா இறப்புகளில் 19.5 வீதமானவை வீட்டிலும் வைத்தியசாலையில் சேர்க்கப்படுவதற்கு முன்பும் நிகழ்கின்றன.
செப்டெம்பர் 3ஆம் திகதி வரையான நிலவரப்படி, கொரோனாவின் மூன்றாம் அலையின்போது 1,339 தொற்றாளர்கள் தங்கள் வீடுகளில் இறந்துள்ளனர். மேலும் 573 பேர் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான இறப்புக்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. முடக்கத்தின்போது அம்புலன்ஸ் வாகனங்களை அழைப்பதில் சிரமங்கள் இருக்கலாம். இதுவே வீட்டில் சம்பவிக்கும் இறப்புகளுக்குப் பிரதான காரணம்” – என்றார்.