மத்திய வங்கியின் ஆளுநராக கப்ராலா? அநீதியானது என்கிறாரா எரான்.
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்பது அநீதியான செயற்பாடு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஊடகங்களிடம் தெரிவித்தார்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுபவர் அமைச்சராகவோ அல்லது அரசியலில் ஈடுபடுபவராகவோ இருக்க முடியாது எனச் சட்டத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி மற்றும் அதன் ஆளுநர் சுயாதீனமாக இயங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஒருவர் அமைச்சுப் பதவியைத் துறந்தாலும் உடனடியாக மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், பதவியை இராஜிநாமா செய்தாலும், குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்பதற்கு முன்னர் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பல கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் எனவும் எரான் விக்கிரமரத்ன எம்.பி. மேலும் தெரிவித்தார்.