வைகைப்புயல் வடிவேலு இன்று 61ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
வைகைப்புயல் வடிவேலு இன்று தன்னுடைய 61ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வடிவேலு எப்போதும் ரசிகர்களால் எல்லா நேரமும் கொண்டாடப்பட்டுவருகிறவர்தான்.
அவருடைய பிறந்தநாள் என்பது கூடுதல் கொண்டாட்டத்துக்குரியது. அதுவும் இந்திய பாரம்பரியத்தில் 60ஆம் பிறந்தநாள் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான மைல்கல். கடந்த ஆண்டு கடந்து சென்ற வடிவேலுவின் 60ஆம் பிறந்தநாள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் வடிவேலுவின் இந்த ஆண்டு பிறந்தநாள் அதைவிட பன்மடங்கு கொண்டாட்டத்துக்குரியதாகிறது. அவர் மீண்டும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கப் போகிறார் என்பதே இதற்குக் காரணம்.
கடந்த பத்தாண்டுகளாக வடிவேலு நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்புக்கும் ஏக்கத்துக்கும் வித்திட்ட இந்த இடைவெளிக்கு திரைப்பட உலகுக்கும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சொல்லப்படாத பல காரணங்கள்.
ஆம்! வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடையாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீர்க்கப்பட்டதாகவும் வடிவேலு ஐந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கரோனா பெருந்தொற்றால் கொடூரமாக துண்டாடப்பட்ட இந்த ஆண்டின் மிகப் பெரிய நற்செய்தி. மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் பெரும் நம்பிக்கைக்கும் உரிய செய்தி.
முதலில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்னும் தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கப்போகிறார் வடிவேலு. சமூக வலைத்தளங்களில் மீம்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறவை. சமூக வலைத்தளப் பதிவுகளிலும் அன்றாட பேச்சுவழக்குகளிலும்கூட இந்த வசனங்கள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு. வடிவேலுவின் பல திரைப்படங்களின் வசனங்களுக்கு இது பொருந்தும் என்றாலும் ’தலைநகரம்’ நாய்சேகரின் வசனங்களுக்கு இந்தப் பட்டியலில் தனிச்சிறப்பு மிக்க இடம் உண்டு. இப்போது அந்தக் கதாபாத்திரத்தை வைத்தே ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுவதும் அதுவே வடிவேலுவின் மறுவருகைப் படமாக அமைவதும் ரசிகர்களின் எதிபார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன.
தற்போது ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் வடிவேலு முதல் படத்தின் தொடக்க விழாவில் பேசிய விதம் அவருடைய நகைச்சுவைத் திறன் துளியும் குறைந்துவிடவில்லை என்பதை நிரூபித்தது. உண்மையில் அவரையும் அவருடைய நகைச்சுவையையும் பிரிக்கவே முடியாது. வடிவேலு திரையில் மட்டுமல்ல நேரில் பேசினாலும் பொது நிகழ்ச்சிகளில் பேசினாலும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். ரசித்துக்கொண்டே இருக்கலாம். இவற்றின் மூலம் வடிவேலு இன்னும் பல நூறு படங்களில் நடித்து நகைச்சுவையை வாரி வழங்கி ரசிகர்களை சிரிக்க வைத்து கவலைகளை மறக்க வைத்துக்கொண்டே இருக்கப் போகிறார் என்னும் நம்பிக்கை பெருவாரியான மக்களிடம் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. அதுவே வடிவேலுவின் 61ஆம் பிறந்தநாளை இன்னும் பல மடங்கு கொண்டாட்டத்துக்குரியதாக ஆக்கியிருக்கிறது.
இந்த நம்பிக்கை பலிக்கட்டும். வடிவேலுவின் வெற்றிப் பயணம் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரட்டும். அவருடைய உடல் ஆரோக்கியமும் மனநிம்மதியும் பன்மடங்கு பெருகட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வடிவேலு!