கூட்டமைப்பின் ஐ.நா ஆவண சர்ச்சைக்கு சுமந்திரனின் விளக்கம்
நாங்கள் அனுப்புகின்ற ஆவணங்கள் எங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு அது நியாயமானதாக தென்பட வேண்டும். அப்போது தான் அது சர்வதேச அரங்கத்தில் எடுபடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (11) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பலவிதமான கேள்விகள் வதந்திகள் உலா வருகின்ற காரணத்தினால் இந்த ஊடக சந்திப்பை நடாத்த முடிவு செய்திருக்கிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட 46/1 என்கின்ற தீர்மானம் சம்பந்தமான ஒரு முன்னேற்ற அறிக்கை வாய்மொழி மூலமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது மட்டும் தான் இந்த அமர்வில் நடைபெறும். எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்படாது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலேயே 46/1 தீர்மானத்தினுடைய முழுமையான எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனுடன் இணைந்து இலங்கை மீதான விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இலங்கையிலே நடக்கின்ற சில விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் வழமையாகவும் தொடர்ச்சியாகவும் ஆவணங்களை அனுப்பி வருகின்றோம். தொடர்ச்சியான தொடர்பாடல் எங்களுக்கும் அந்த அலுவலகத்துக்கும் 2012 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றது.
சிலருக்கு நினைப்பு ஆவணங்களை தயாரித்து அனுப்பினால் மாத்திரம் தான் அவர்கள் பார்ப்பார்கள் என்று . ஆனால் அவ்வாறில்லை. அடிமட்டத்தில் இருக்கின்ற பல சிவில் சமூகத்தினருடன் அவர்கள் பேசுவார்கள். அரசியல் கட்சிகளுடன் பேசுவது குறைவு இதனை நான் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. ஐநா மனித உரிமை கூட்டத் தொடரிலே பார்வையாளர் அந்தஸ்து கூட அரசியல் கட்சிகளுக்கு கொடுப்பதில்லை. அங்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆக இருக்கக் கூடிய அமைப்புகளுக்கு மாத்திரமே அனுமதி இருக்கின்றது.
ஒவ்வொரு நாட்டிலும் இருந்து அந்த நாட்டில் இருக்கின்ற எதிர்க்கட்சிகள் செல்ல முடியுமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். எதிர்க்கட்சி சென்று ஆளும் கட்சியை விமர்சிக்கின்ற ஒரு அரசியல் களமாக இருக்கும்.
இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கும் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்ற எல்லா ஆவணங்களிலும் சம்பந்தனே கையெழுத்து வைத்து அனுப்பி இருக்கின்றார். அவருக்குரிய மரியாதை அலுவலகத்திலும் உறுப்பு நாடுகள் மத்தியிலும் இருக்கின்றது.
கடந்த மார்ச் மாத அமர்வுக்கு முன்னதாக நாங்கள் ஒரு ஆவணத்தை தயாரித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஏனைய இரண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளையும் சேர்ந்து அதனை உருவாக்கி இருந்தோம்.
அவர்களுக்கு ஒரு சில ஆசனங்கள் இருந்தாலும் அவர்களையும் சேர்த்து நாங்கள் அதனை முன்னெடுத்து இருந்தோம்.
எல்லா கட்சிகளும் பல சிவில் சமூகமும் சேர்ந்து 46/1 தீர்மானத்திற்கு முன்னதாக அனுப்பப்பட்ட ஆவணத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.
அந்த ஆவணத்தில் பிரதானமாக நாங்கள் மேற்கோள் காட்டிய தருஸ்மன்,சூகா ஆகிய சர்வதேச நிபுணர்களின் அறிக்கையை அடிப்படையாக வைத்தே இலங்கை படையினர் செய்த விசேடமாக இறுதி யுத்தத்திலே மேற்கொள்ளப்பட்ட பலவிதமான சர்வதேசக் குற்றங்களை மேற்கோள்காட்டி சுயாதீன சர்வதேச விசாரணை கோரப்பட்டது.
அனைத்து தரப்பினராலும் குற்றங்கள் புரியப்பட்டதாக நிபுணர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர் குழு அறிக்கையை நாங்கள் எழுதவில்லை.
புலிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரி தமிழரசுக் கட்சி ஆவணம் அனுப்பி இருப்பதாக பத்திரிகைகள் கூறுகிறது. எதை வைத்து அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். பத்து வருடங்களாக எல்லோருடைய கையிலும் இருக்கின்ற நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழரசுக்கட்சியா எழுதியது? உலகத்திலேயே சிறந்த மனித உரிமை அமைப்பினரால் வரையப்பட்டதாகும்.
சுயாதீன விசாரணையை கோருபவர்கள் ஒருபோதும் எங்களையும் விசாரிக்க வேண்டாம் ஏனைய தரப்பை விசாரியுங்கள் எனக் கோர மாட்டார்கள். நாங்கள் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரியிருக்கின்றோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட இருபக்கமும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் கோரியிருந்தார்.
சம்பந்தன் அனுப்பியது ஒரு வரைபே. அதனை மாற்ற முடியும் முடிந்திருக்கும் ஆனால் எங்களுக்கு சொல்லாமல் எங்களுக்கு தெரியாமல் இன்னொரு அறிக்கையை தயாரித்து விட்டு வேறு சிலருடன் அறிக்கையை கைச்சாத்திடுவதையே நாங்கள் தவறு என்கிறோம். இதனால் கூட்டமைப்பு குழைந்து விட்டது என்கின்றனர். ஊடகங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு பிளவும் ஏற்படவில்லை. கூட்டமைப்பாக செயற்படும் பொழுது பல பிரச்சினைகள் இவ்வாறு வரும் கடந்த தடவையும் பல தரப்புக்கள் கடிதங்களை அனுப்பியிருந்தார்கள். இதனை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு பல ஆவணங்கள் அனுப்பபடுவதால் தமிழர் மத்தியில் ஒற்றுமை இல்லை என அவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள் அவர்களுக்கு அரசியல் பற்றி தெரியும் அரசியல்வாதிகள் அனுப்புகின்ற ஆவணங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் வேறு விதமாகவே தகவல்களை சேகரிப்பார்கள். நாங்களும் அனுப்புவோம் என மக்களை திருப்தி படுத்துவதற்காகவே அவர்கள் அங்கு ஆவணங்களை அனுப்புகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவ்வாறா என நீங்கள் கேட்கலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் விதிவிலக்கு சம்பந்தன் கைச்சாத்திட்டு அனுப்பிய ஆவணங்கள் நியாயமானதாகவும் நடுநிலை தவறாததாகவும் நீதியை மட்டும் கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.
2012ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அவர்களுடன் நான் தொலைபேசியில் கலந்துரையாடி வருகின்றேன். சாதாரணமாக அரசியல்வாதிகளைப் போல வேலை செய்பவர்களல்ல இவர்கள் என்று அவர்களுக்கு தெரியும். அந்த மதிப்பை நாங்கள் இழக்கக்கூடாது அது மிகவும் முக்கியமானது.
நாங்கள் அனுப்புகின்ற ஆவணங்கள் எங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு அது நியாயமானதாக தென்பட வேண்டும். அதுவே சர்வதேச அரங்கத்தில் எடுபடும்.
சர்வதேசத்தில் என்ன நடக்கின்றது என்ற தெளிவு இல்லாதவர்கள். தெளிவு இருந்தும் இல்லாதது போல் நடிப்பவர்கள் இதனைத் திரித்துக் கூறுகிறார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு ஆவணத்தை அனுப்பி இருக்கின்றார். தமிழரசுக் கட்சி அதற்கு மேலதிகமாக ஆவணத்தை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் தமிழரசுக் கட்சியாக எந்த ஆவணத்தையும் அனுப்பவில்லை. இதனைச் சொல்லும் பொழுது நீங்கள் கேட்பீர்கள் இணையதளம் ஒன்றில் 9 பேர் கையொப்பமிட்டு தமிழ் தேசியத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற கடிதத் தலைப்பு போடப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு அமைப்பு இருப்பதாக தெரியாது அவ்வாறு அமைப்பு ஒரு காலமும் உருவாக்கப்படவில்லை.
அதில் கைச்சாத்திட்ட நபர்களாக சொல்லப்படுகின்றவர்கள் அதற்கு முதல்நாளே நாங்கள் அப்படி ஒன்றும் அனுப்பவில்லை என அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றார்கள். அதனால் இணையத்தில் வெளிவந்த ஆவணங்களின் உண்மை தன்மை எங்களுக்குத் தெரியாது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருடைய கையெழுத்தை வேறு மாதிரியாக பிரயோகிப்பது என்பது மிக மோசமான குற்றவியல் செயல். இதனுடைய உண்மை தெரியாமல் நாங்கள் எதுவும் கூற முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களும் அந்த ஆவணத்தில் இருக்கின்றது. உள்ளூராட்சி சபை உறுப்பினரின் பெயர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பெயர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெயரென உள்ளது. இது உண்மையா என்பது எங்களுக்கு தெரியாது.
சர்வதேச சமூகம் எங்களுடன் நிற்பதற்கான முக்கிய காரணம் அரசாங்கத்தை போல நாங்கள் நடந்து கொள்ளவில்லை. நாங்கள் நியாயமானதையே கேட்கின்றோம். அரசாங்கம் பச்சை பொய் சொல்கிறது என்பது தெரிந்த விடயம் என்று சொல்லி தப்ப முடியாது. அந்த நேரத்தில் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா இன்றைக்கும் எல்லா இடத்திலும் வெளிப்படையாக சர்வதேச விசாரணையை வையுங்கள் என்றும் அதற்கு நான் முகம் கொடுக்கத் தயார் என்கிறார்.
அரசாங்கம் கொடுமையாக செயற்பட்டு மக்களை அழித்து மக்களுக்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்துவிட்டு பொதுமக்கள் உயிரிழக்கவில்லை எனக் கூறினார்கள்.சர்வதேசத்தின் முன்பு அவர்கள் முகத்தை காட்ட முடியுமா? நாங்கள் அவ்வாறு இல்லையே நாங்கள் சொல்வது நாங்கள் கூறுவது நியாயமானது.
பாதுகாப்பு சபையில் இலங்கை சம்பந்தமாக ஒரு விடயம் எடுக்கப்பட்டு இருந்தது. இது சில பத்திரிகைகளில் வெளிவந்தது. இறுதியாக நடந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் இலங்கை சம்பந்தமாக ஒரு கரிசனை எழுப்பப்பட்டது.ஆகவே படிப்படியாக அனைத்தும் நடைபெறும் என்றார்.