மதுப்பிரியர்கள் மீது அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டும் அக்கறை
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பும் மதுபிரியர்களுக்கு தெரியும் வகையில் ஒரு வாரத்துக்குள் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, இந்த விலைப்பட்டியலில் இருந்து ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் கூட கடையின் விற்பனையாளர், மேற்பார்வையாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்து வரும் குறைபாடுகளை சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்தாலோசித்தார்.
இதன்பின்னர், அமைச்சர் நிருபர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் 5 ஆயிரத்து 410 டாஸ்மாக் கடைகளும், 2 ஆயிரத்து 808 பார்களும் உள்ளன. கொரோனா காரணமாக பார்கள் தற்போது இயங்கவில்லை. பல்வேறு கால கட்டங்களில் நடத்திய ஆய்வில் 529 கடைகளில் நடந்த விதிமீறல் தொடர்பாக 1,072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பாகவும் மதுபிரியர்களுக்கு தெரியும் வகையில் ஒரு வாரத்துக்குள் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை விட ஒரு நிமிடம் கூட கடைகளை திறந்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் நேரம் கடைகளை திறந்து வைத்து மதுபானங்கள் விற்பது கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல மதுபானக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மதுபாட்டில்கள் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கும் நடைமுறையை செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவே ரசீது வழங்கும் நடைமுறை கொண்டுவர வலியுறுத்தப்படுகிறது. இதற்காகத்தான் விலைப்பட்டியல் வைக்கப்படுகிறது. இந்த விலைப்பட்டியலில் இருந்து ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் கூட கடையின் விற்பனையாளர், மேற்பார்வையாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக்கைப் பொறுத்தமட்டில் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. வருங்காலங்களிலும் அதுபோன்று இலக்கு நிர்ணயிக்கப்போவதும் இல்லை. டாஸ்மாக் கடைகளை குறைப்பது என்பது கொள்கை ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி டாஸ்மாக் நிர்வாகம் செயல்படும் என்று கூறினார்.