தொடர்கின்றது கைதுவேட்டை; 70 ஆயிரத்து 694 பேர் சிக்கினர் பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள காணொளிப் பதிவிலேயே அவர் இதனைக் கூறினார்.
இதற்கவைமாக நேற்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், 737 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த 92 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 70 ஆயிரத்து 694 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 483 ஆக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று 7 ஆயிரத்து 575 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 193 வாகனங்களில் பயணித்த 306 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
124 பொலிஸாரும் முப்படைகளைச் சேர்ந்த 81 பேரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு உள்நுழைய மற்றும் வெளியேற முற்பட்ட 1,057 வாகனங்களில் பயணித்த 1,705 பேர் நேற்றுமுன்தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று மேல் மாகாணத்துக்குள் தனிமைப்படுத்தல் சட்டதிவிமுறைகளை மீறுவோரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் 300 பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக நேற்றுக் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 5 ஆயிரத்து 857 வாகனங்களில் பயணித்த 8 ஆயிரத்து 718 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் அனுமதிப் பத்திரமின்றி 840 வாகனங்களில் வந்த 1,455 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” – என்றார்.