ஓட்டோ சாரதி கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டுப் படுகொலை!

கம்பஹா மாவட்டம், கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஓட்டோ சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை, சாந்த செபஸ்தியன் மாவத்தைப் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பேலியகொடை துட்டுகெமுனு மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த அன்ருவ் ஜோசப் வின்சன் பேர்னாட் (வயது 51) என்ற நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்றபோது இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் மார்புப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
இது தொடர்பில் கந்தானைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.