உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவி தொடர்பில் மருத்துவ பீட மாணவர் ஒருவர் முகநூலில் உருக்கமான பதிவு!
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவியான சாருகா நேற்று முன் தினம் கற்றல் சுமை காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவரான தர்சிகன் இது தொடர்பில் உருக்கமான பதிவு ஒன்றை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில் , தற்கொலை என்பது தான் மன அழுத்தங்களுக்கான தீர்வு அல்ல. தற்கொலைகளை வெல்வதற்கான பல வழிகள் உள்ளன. மன அழுத்தங்களின் போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் எம்மை நாம் காப்பற்றிக்கொள்ள நான் நினைப்பது இரண்டே வழிதான்.
1) சிறந்த நண்பர்களை சேகரித்து வையுங்கள்.
நண்பர்கள் என்ற உடன் நாம் நினைப்பது எம்முடன் மருத்துவபீடத்தில் இல் கற்கும் மாணவர்களை மட்டும்தான். இது முற்றிலும் தவறான எண்ணம். மருத்துவத்துறைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 75%க்கு மேற்பட்டவர்கள் கற்றலில் மிகுந்த சுயநலக் குணம் உடையவர்கள் என்பது முற்றிலும் உண்மையான ஒன்றே.
எனவே நாம் தேர்வு செய்யும் நண்பர்கள் சிறிய வயதில் இருந்து எம்முடன் கற்ற நல்ல நண்பனாகவோ இல்லாவிட்டால் வேறு ஏதாவது துறைகளில் கற்கும் நண்பனாகவே இருக்கலாம். அதற்காக நான் மருத்துவத் துறையில் இல் கற்பவர்களை நண்பர்களாக்க வேண்டாம் என்று கூறவில்லை , ஆனால் நாம் இதற்குள்ளேயே தேடி சிறந்த நண்பர்களை பெறுவதில் பெரும்பாலும் தோற்று விடுகின்றோம்.
2) உங்களிற்கு உதவக்கூடிய மனப்பாங்குள்ள சிரேஷ்டமாணவர்களுடன் உடன் தொடர்பை பேணுங்கள்.
நாம் அனைவரும் செய்யும் பெரிய தவறு எமது மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவர்களிடம் மட்டும் உதவி கேட்பது, தொடர்பை பேணுவது. நாம் பல்கலைக்கழகம் சென்ற சிறிது காலத்திலேயே எமக்கு பிடித்த, எமக்கு உதவக்கூடிய சிரேஷ்ட அண்ணா அல்லது அக்காவை நாங்கள் இனங்காணலாம்.
அவர்கள் வேறு மாவட்டமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. அவர்களுடன் உங்களுடையை கல்வி சார்ந்த விடையங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.