நல்ல நாள் பார்த்து குழந்தையை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக பிறக்க வைப்பது சரியா?
சரியில்லை. பிறப்பையும், இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை. ஜனனமும், மரணமும் இறைவனின் செயல்.அதனை சரியாக கணிக்க எவராலும் இயலாது.
“ஜனனீ ஜென்ம ஸௌக்யானாம் வர்த்தனீ குல ஸம்பதாம்,பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா” என்ற வாசகத்தினை ஜாதகம் எழுதத் துவங்குவதற்கு முன்பு ஜோதிடர்கள் எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள்.அவரவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படியே இந்த ஜென்மத்தில் பிறப்பானது அமைகிறது என்பது நமது இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கை.
ஒவ்வொரு ஜீவனும் எந்த நேரத்தில் இந்த பூமியில் பிறப்பெடுக்க வேண்டும் என்பதை இறைவனால்தான் நிர்ணயம் செய்ய முடியும். வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் நாம் நாளையும், நேரத்தையும் கணித்து சிசேரியன் மூலம் பிள்ளையைப் பிறக்க வைப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.ஆனால், உண்மையில் அவ்வாறு ஜோதிடர் கணித்துக் கொடுக்கும் சரியான மணித்துளிக்கு நிச்சயமாக எந்த மருத்துவராலும் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க வைக்க இயலாது.இந்த பூமியில் முதன்முதலாக காற்றை சுவாசித்து குழந்தை அழுகின்ற நேரமே அதன் பிறப்பு நேரமாகக் கருதப்படுகிறது.
சிசேரியன் மூலம் குழந்தையைப் பிறக்க வைத்தாலும் (வெளியில் எடுத்தாலும்) அது இந்த பூமியின் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் அந்த தருணமே குழந்தையின் ஜனன நேரமாகக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் அமைகின்ற லக்னம்தான் குழந்தையின் ஜென்ம லக்னமாகிறது. இதன் அடிப்படையில்தான் அந்த குழந்தையின் எதிர்காலப் பலன்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
என்னதான் நாம் நாளையும், நேரத்தையும் ஜோதிடரின் கணிப்புப்படி மருத்துவரிடம் தெரிவித்தாலும் சரியாக அந்த நிமிடத்தில் குழந்தையை பிறக்க வைக்க எவராலும் இயலாது. ஏதோ ஒரு காரணத்தால் நேரம் தப்பிப்போகும். மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருவதற்கு தாமதம் ஆகலாம்;. மின்சாரம் தடைபடலாம்.பிரசவம் பார்க்க வேண்டிய மருத்துவருக்கேகூட உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.
இதுபோன்ற காரணங்களை நாமும் அன்றாடம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆபரேஷன் தியேட்டருக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியில் இருக்கும் நமக்கும் தெரியாது, மயக்க நிலையில் இருக்கும் தாய்க்கும் தெரியாது. ‘உங்களுடைய மனத்திருப்திக்காக நீங்கள் குறித்துக் கொண்டு வந்திருக்கும் அந்த நேரத்தில்தான் குழந்தையை பிறக்க வைத்திருக்கிறோம் என்றுதான் நாங்கள் வெளியில் சொல்வோம்,’ என்கிறார் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு நண்பர். ஆக நாளை வேண்டுமானால் நாம் நிர்ணயிக்க முடியும், குழந்தை பிறக்கின்ற நேரத்தை நிச்சயமாக எந்த மனிதனாலும் குறித்துக் கொடுக்க இயலாது. அவ்வாறு குறித்துக் கொடுத்தாலும் அந்த நேரத்திற்கு குழந்தையை பிறக்க வைக்க இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.