ஆசீர்வாத் திட்டம் நிறுத்தத்தால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை!
ஜூன்20, 2021-ல் ஒடிசா முதல்வ நவீன் பட்நாயக் இந்த ஆசீர்வாத் திட்டத்தை கொண்டு வந்தார். ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு கொரோனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இதன் மூலம் பயனடைந்து வந்தனர். மாதம் ரூ.1500 முதல் ரூ.2,500 வரை இவர்களுக்கு அளிக்க வேண்டும். இதைத்தவிர பிற பயன்களையும் வழங்க வேண்டும்.
ஆனால் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதும் ஒடிசா அரசு இந்த திட்டத்தை நிறுத்தி விட்டது. அதாவது செப்டம்பர் 13-ம் தேதி ,மாநிலத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சேவை மற்றும் சமூக நல அமைப்பின் இயக்குநர் அரவிந்த் அகர்வால் மாவட்ட கலெக்டர்களை அழைத்து ஆசீர்வாத் திட்டத்தை நிறுத்துமாறு ஆர்டர் போட்டுள்ளார்.
இவர்கள் பொதுவான குழந்தைகள் நல திட்டங்களுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அந்த உத்தரவின் சாராம்சம். கோவிட்டினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை உதவி புரிய வேண்டியத் திட்டத்தை நிறுத்த இவர் யார் என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது. ஆசீர்வாத் திட்டத்தின் படி பெற்றோரில் ஒருவரை இழந்தால் கூட அந்தக் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி அளிக்க வேண்டும். அதே வேளையில் குடும்பத்துக்கு வாழ்வாதார பொறுப்பாக இருந்த தந்தையோ தாயோ இருவரில் ஒருவர் இறந்தால் கூட குழந்தையை வளர்ப்பவர் அக்கவுண்டுக்கு ரூ.1,500 செலுத்தப்பட வேண்டும்.
மேலும் கொரோனாவுக்கு பெற்றோர் இருவரையும் இழந்து குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 1000 ரூபாய் ரெகரிங் டெபாசிட்டும் செய்ய வேண்டும் என்பதே ஆசீர்வாத் ஸ்கீமாகும். 18 வயது வரை இந்த உதவி சென்றாக வேண்டும் என்பதே வழிகாட்டு நெறியாகும். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு 31,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 10,000 குழந்தைகள் தான் பயனடைந்து வருகின்றனர், மீதிக் குழந்தைகளுக்கு இது இன்னும் சென்றபாடில்லை.
இந்நிலையில் ஒடிசா அரசு கோவிட் குறைந்ததைக் காரணம் காட்டி ஆசீர்வாத் நலத்திட்டத்தை நிறுத்தி வைத்ததாக அங்கு கண்டனம் எழுந்து வருகிறது.