அநுராதபுரம் சிறைச்சாலையில் அட்டகாசம்: இராஜாங்க அமைச்சரை உடன் பதவி நீக்குக.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அநாகரிகமாக நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரவைப் பதவி நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, அங்கு தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முகநூல் பதிவு வருமாறு:-
“அநுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் இராஜாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்த அரசுக்குக் கடப்பாடு உள்ளது.
இந்தச் சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
இந்த இராஜாங்க அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.