தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 965 பேர் கைது! சோதனை நடவடிக்கைகள் தீவிரம்.
“தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று 965 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.”
இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று வெளியிட்ட காணொளிப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 78 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 197 வாகனங்களில் பயணித்த 308 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிப் பயணிப்போரைக் கைதுசெய்யும் நடவடிக்கை நேற்றும் முன்னெடுக்கப்பட்டது.
318 பொலிஸார் இணைந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது அனுமதிப்பத்திரமின்றில 758 வாகனங்களில் பயணித்த 1147 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” – என்றார்.