கிரிக்கெட் வர்ணனையிலிருந்து விடைபெற்றார் மைக்கேல் ஹோல்டிங்.
31 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையில் அரியபல நுணுக்கங்களையும் கிரிக்கெட் ஆட்டத்தையும் நுட்பங்களையும் கற்றுக் கொடுத்த மே.இ.தீவுகள் லெஜண்ட் மைக்கேல் ஹோல்டிங் கிரிக்கெட் வர்ணனைக்கும் பிரியாவிடை கொடுத்தார்.
60 டெஸ்ட் போட்டிகள், 102 ஒருநாள் போட்டிகளில் மே.இ.தீவுகளுக்காக ஆடி அவர் காலத்திய பேட்ஸ்மென்களுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கிய அதிவேக வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் 391 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1987-ல் ஓய்வு பெற்ற ஹோல்டிங் 1990-ல் முதன் முதலாக இங்கிலாந்து அணியின் மே.இ.தீவுகள் பயணத்தின் போது மைக்கை வர்ணனைக்காகப் பிடித்தார்.
ஹோல்டிங்கிற்கு இப்போது வயது 67. 2020-லேயே அவர் கூறினார் இன்னும் எத்தனை நாட்களுக்கு வர்ணனை செய்வேன் என்று தெரியவில்லை என்று ஐயம் தெரிவித்திருந்தார். ஹோல்டிங்கின் மேற்கிந்திய உச்சரிப்பு ஆங்கிலத்தில் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை மிக அழகாக விவரிப்பார், வர்ண்னைப் பிரியர்களுக்கு இது ஒரு பெரிய இழப்புதான். இன்றைய தலைமுறை, பவுண்டரி, சிக்சர்களைக் கிரிக்கெட்டாகப் பார்க்கும் பிரபலங்களின் பின்னால் ஓடும் ரசிக மனோபாவங்களுக்கு வர்ணனையின் மகத்துவம் புரிய வாய்ப்பில்லை.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் மைக்கேல் ஹோல்டிங். நல்ல வர்ணனை என்பது ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனோ, பில் லாரி, டோனி கிரேக், இயன் சாப்பல் ஆகியோருடன் முடிந்து விட்டது. இங்கிலாந்தில் பாப் வில்லிஸ், டேவிட் கோவர், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் வர்ணனையின் உயரிய மதிப்பீடுகளைக் காத்து வந்தனர். முன்னால் மே.இ.தீவுகளின் டோனி கோசியர் கிரிக்கெட் வர்ணனைத் திலகமாக திகழ்ந்தார்.
தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் ராமமூர்த்தி, கூத்தப்பிரான், அப்துல் ஜப்பார், போன்றோர் பிரமாதமாக வர்ணனையின் அளவுகோல்களை நிர்ணயித்தவர்கள், இந்தியாவில்இந்தி வர்ணனையில் அதிவேகமாக பந்துடனேயே ஓடும் சுஷில் தோஷி. ஆங்கில வர்ணனையில் நரோத்தம் பூரி, அனந்த் செட்டில்வார்ட், சுரேஷ் சுரய்யா, டிக்கி ரத்னாகர், போன்றோரின் குரல் வளமும் ஜிம் மேக்ஸ்வெல், கிறிஸ்டபர் மார்டின் ஜென்கின்ஸ், டோனி லூயிஸ் போன்றோரின் வானொலி வர்ணனைகளும் இல்லையெனில் கிரிக்கெட் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அமெரிக்காவி ஜார்ஜ் பிளாய்ட் கொலை அதன் பிறகான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் மைக்கேல் ஹோல்டிங்.