முதியோர் பென்ஷன், தீபாவளிக்கு சலுகைகள் பெறுவதற்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட துணைநிலை ஆளுநர்
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, புதுச்சேரியில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் என்றும், அது மட்டுமில்லாமல் முதியோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை பெற வேண்டும் என்றால் அவர்கள் கட்டாயம் தடுப்பூசி சேர்த்துக் கொண்டால் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் தீபாவளிக்கு சலுகைகள் அறிவித்தால் அதை பெறுவதற்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் 15 நாட்களுக்குள் 100% செலுத்திக் கொள்ள மிக தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும் என்று கூறினார்.
தொடர்ந்து கஞ்சா விற்பனை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், புதுச்சேரியில் போதைப்பொருள் நடமாட்டத்தை நிச்சயமாக அனுமதிக்க முடியாது என்றும், அப்படி போதைபொருள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய சொல்லி அவற்றை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.