மேற்கு வங்கத்தில் பரவும் மா்மக் காய்ச்சலால் அதிக அளவிலான குழந்தைகள் பாதிப்பு
மேற்கு வங்கத்தின் வடமாவட்டங்களில் அதிக அளவிலான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் மாநில சுகாதாரத் துறைச் செயலா் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாக ஜல்பைகுரி மற்றும் அண்டை மாவட்டங்களில் செப்டம்பா் தொடக்கத்திலிருந்து 1400-க்கு மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், இதுதொடா்பாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், சுகாதாரத் துறை அதிகாரிகள், 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு மாநில சுகாதாரத் துறைச் செயலா் என்.எஸ்.நிகம் கூறியதாவது: குழந்தைகளின் காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அதை எதிா்கொள்வதற்கான வழிமுறைகளை சுகாதாரத் துறை ஆராய்ந்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை.
ஜல்பைகுரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3 குழந்தைகளுக்கு பிற நோய்கள் இருந்தன. அதுவே அவா்களது மரணத்துக்கு காரணம் என்றாா் அவா்.
சுகாதாரத் துறை துணைச் செயலா் அஜய் சக்கரவா்த்தி கூறுகையில், ‘மாநிலத்தில் இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற சுவாச நோய்கள் அசாதாரணமானது அல்ல. கடந்த ஆண்டு ஜல்பய்குரி மாவட்ட மருத்துவமனையில் இதே காலகட்டத்தில் 1,195 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா்’ என்றாா் அவா்.
எதிா்க்கட்சித் தலைவா் கோரிக்கை: மேற்கு வங்கத்துக்கு மருத்துவ நிபுணா் குழுவை உடனடியாக அனுப்பி வைக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. மாநில சுகாதாரத் துறைக்கு உதவி செய்ய மத்தியக் குழுவை உடனடியாக அனுப்பி வைக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.