விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகல்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபி எமிரேட்சில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று திடீரென்று அறிவித்தார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக தொடருவேன் என்று தெரிவித்துள்ளார். பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விராட்கோலியின் இந்த முடிவை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி உள்ளார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும்போது, இந்திய அணியின் எதிர்கால நலனை மனதில் கொண்டு விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார். வருகிற 20 ஓவர் உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வோகன் டுவிட்டரில் கூறும்போது,” விராட்கோலியின் இந்த முடிவு மிகவும் சுயநலமற்றதாகும். அனைத்து அழுத்தங்களிலும் இருந்து சிறிது ஓய்வு எடுக்க உங்களுக்கு நல்ல இடத்தை அளிக்கும் இந்த முடிவுக்கு பாராட்டு” என்று கூறி உள்ளார்.