சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் கார் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. வெள்ளனூர், பொம்மாடிமலை, தொடையூர் ,நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்த நிலையில் த பொம்மாடி மலை – துடையூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. சுமார் 20 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நின்றது. இது தெரியாமல் அக்கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மனைவியும் ஒசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவருமான சத்தியா தனது மாமியாருடன் காரில் சென்றுள்ளார். தேங்கிய தண்ணீரில் சுரங்கப் பாதையில் கார் நின்று விட, காருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
அப்போது காரின் சைலன்சருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால், காரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது மாமியார் மட்டும் கார் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து கரை சேர்ந்துள்ளார்.
ஆனால் சத்தியா சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதனைக் கழட்டிக் கொண்டு உடனே வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அக்கிராம மக்கள் சத்யாவின் சடலத்தை காரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தங்கள் கிராமத்திற்கு செல்லும் தரை பாலத்தை மேம்பாலமாக மாற்றி தரக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுடைய கருத்தை கேட்காமலேயே இந்த சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர். மழைக்காலங்களில் இதுபோல் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால் பெரும் அசம்பாவிதம் நடந்துவிடும் என்பதற்காகத்தான் தங்கள் கிராம மக்கள் போராடி வந்தோம். இனியாவது அந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி துடையூர், வெள்ளனூர், பொம்மாடிமலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் புதுக்கோட்டை – திருச்சி சாலையில் பொம்மாடிமலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களோடு போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், ரயில்வே பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தால்தான் போராட்டத்தை தொடருவோம் என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சுரங்கப் பாதை மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் சுமார் 30 கி.மீ சுற்றிச் செல்வதாகவும் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.