ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க போகும் நாடுகள்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கான வாக்களிப்பின் போது இம்முறை பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் வாய்மூல அறிக்கையை முன்வைத்த மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விடயங்களை முன்வைத்தார்.
அதன் மீதான விவாதத்தில் கலந்துகொண்டுள்ள பல்வேறு நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இம்முறை அமர்வில் உரையாற்றிய ஜப்பானின் வதிவிட பிரதிநிதி..
இலங்கைக்கு தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை போன்ற விடயங்களை மேம்படுத்த சந்தர்ப்பம் உள்ளதாகவும் அரசாங்கம் விசாரணை ஆணைக்குழு மூலம் விசாரணை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படுவது முக்கியம் எனவும் அந்த முயற்சிக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜெனிவாவிலுள்ள இந்தியாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி அது தொடர்பில் தெரிவிக்கையில்..
நாடுகளுக்கிடையிலான விவாதங்கள், பேச்சுவார்த்தைகள், தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலமும் மனித உரிமையை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பதை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜெனிவா மனித உரிமை பேரவையின் கடந்த 46ஆவது அமர்வின்போது இலங்கை மனித உரிமையை மீறி செயற்படுவதாக ஐக்கிய ராஜ்யம், கனடா, ஜெர்மனி, மொன்டிநீக்ரோ, வட மசிடோனியா, மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்துள்ள 46/1 யோசனை நிறைவேற்றப்பட்டிருந்தது.
11 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன் மேலும் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. சில நாடுகள் நடுநிலை வகித்தன.
எனினும் தற்போது நடைபெறும் 48ஆவது மனித உரிமை பேரவை அமர்வில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.