ஆட்சியை மாற்ற வேண்டும்! – தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்து.
“சர்வதேச சமூகத்துக்கு இருமுகங்களைக் காண்பிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மாற்ற வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இணையவழியிலான நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மேலும் தெரிவித்ததாவது:-
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், உள்நாட்டில் இந்த அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ளுதல், புதிய அரசமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்று எழுப்பப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாங்கள் எந்தவொரு அரசின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவ்வாறு கொள்ளப்போவதும் இல்லை. கடந்த அரசின் மீதும் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே இருந்தோம். ஆனால், அவர்கள் புதிய அரசமைப்பை உருவாக்குவதாக சொன்னார்கள். அதற்காக அவர்களுடன் இணைந்து முயற்சிகளை எடுத்தோம். அது சாத்தியமாகவில்லை. அவ்வாறிருக்கையில், தற்போது ஆட்சியில் உள்ள அரசானது சர்வதேசத்துக்கு இரட்டை முகங்களைக் காண்பிக்கின்றது.
கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா.வின் 46ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனை முழுமையாக இலங்கை அரசு நிராகரித்தது. பின்னர் ஜுனில் 47ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பொறுப்புக்கூறல் விடயத்தில் கூட ஐ.நா. மனித உரிமைகள் சபையுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயார் என்று ருவிட்டர் மூலம் ஜனாதிபதி அறிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாம் அதனை உடனடியாக வரவேற்றிருந்தோம். நடைமுறையில் அவரின் செயற்பாடுகளைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஜனாதிபதியின் இந்த விடயத்தைத் தானும் கவனித்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரும் தற்போது நடைபெற்று வரும் 48ஆவது அமர்வின் வாய்மூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறிருக்கையில் தற்போது மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிப்பதாக அரசு அறிவிக்கின்றது. உண்மையிலேயே அரசு தனக்குள்ள இரண்டு முகங்களில் எதனைக் காண்பிப்பது என்பது தொடர்பில் தெரியாது நிற்கின்றது. ஆகவே, அரசு தனது போக்கை மாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் நாட்டுக்கு மோசமான பின்விளைவு காத்திருக்கும்.
இதேவேளை, எதிரணிகளின் அரசுக்கு எதிரான ஒன்றிணைவின்போது இனப்பிரச்சினை விடயத்தையும் உள்ளீர்க்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். கடந்த தடவையும் அந்த விடயம் உள்ளீர்க்கப்பட்டது. அந்தவகையில் இம்முறையும் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது நாம் எமது விடயங்களையும் முன்னிலைப்படுத்துவோம்.
எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற கொடூரமான ஆட்சியைத் தொடர இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிக்க விடுவதானது சிறுபான்மை தேசிய இனங்களுக்குக் குறிப்பாக தமிழர்களுக்குப் பேராபத்தானது.
விசேடமாக இந்த ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்புக்கள் அதிகமாகியுள்ளன. இந்நிலைமை தொடர்ந்தால் தீர்வு பற்றி பேசுகின்ற போது நாம் நிலமற்றவர்களாகிவிடுவோம். அதற்குப் பின்னர் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் பயனில்லை. ஆகவே, அவ்விதமான ஆக்கிரமிப்பு, அடக்குமுறை ஆட்சியை உடனடியாக மாற்ற வேண்டும்” என்றார்.