இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி – 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!
‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வரும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு அடுத்த 10 நாள்களில் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
கொரோனா பாதிப்பு தீவிரமடையத் தொடங்கிய உடன் வெளிநாட்டு பயணிகள் வரத் தடை, உள்நாட்டில் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு தீவிர கட்டுப்பாடுகளை உலக நாடுகள் அறிவித்தன. அதுபோல, இந்தியாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகலமாக இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதைத் தொடா்ந்த படிப்படியாக கட்டுப்பாடுகளை தளா்த்திய இந்தியா, இப்போது முழுமையான பொருளாதார செயல்பாடுகளுக்கு அனுமதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக, கரோனா பொது முடக்கத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்த முடிவையும் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இதுதொடா்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடா்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வர அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா பொது முடக்கத்தால் கடும் வருவாய் இழப்பை சந்தித்துள்ள சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக, முதல் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அல்லது 2022-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை இலவச சுற்றுலா விசா வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தாா்.
இப்போது, ஒரு மாத காலத்துக்கான மின்னணு வழியிலான சுற்றுலா விசாவுக்கு ரூ.1,800, ஓராண்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லக் கூடிய வகையிலான மின்னணு சுற்றுலா விசாவுக்கு ரூ. 2,900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகினறனா். குறிப்பாக, இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களை மட்டும் அனுமதிப்பது மற்றும் சூழலை கண்காணித்து படிப்படியாக அனுமதிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனா். எனவே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு அடுத்த 10 நாள்களில் வெளிவர வாய்ப்புள்ளது’ என்றாா்.