பீகார் விவசாயி வங்கி கணக்கில் 52 கோடி – தவறுதலாக வரவு வைக்கப்பட்டது எப்படி?
பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். அவர்கள் இருவரும் பள்ளி மாணவர்கள். அவர்களுக்கு உத்தர் பீகார் கிராமின் வங்கியில் வங்கிக் கணக்கு உள்ளது. அவர்கள் இருவரும் தங்களது பள்ளிச் சீருடைக்காக அரசு எவ்வளவு ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது என்று சோதனை செய்வதற்காக அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளது. அப்போது அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து மிரட்சியடைந்துள்ளனர்.
வங்கியில் சோதனை செய்தபோது விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடிரூபாய் பணம் இருந்துள்ளது. அதேநேரத்தில் அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்த நிலையில் வங்கி மேலாளர் மனோஜ் குப்தாவும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, அவர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியாதபடி முடக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பீகார் மாவட்டம் முசாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பகதூர் ஷா, அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆதார் அட்டை மூலம் வங்கி கணக்கை சரிபார்த்த போது 52 கோடி ரூபாய் இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தார். எப்படியும் அரசாங்கம் இதனை எடுத்துவிடும் எனக் கூறியுள்ள விவசாயி, தனது வாழ்வாதாரத்திற்காக இதிலிருந்து சிறு தொகையை தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகாரில் சாமானிய மக்கள் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் வங்கிக்கணக்கில் சுமார் 900 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.