மோசடிக் குற்றச்சாட்டில் கைதான நைஜீரிய பிரஜைகள் இருவருக்கு விளக்கமறியல்!
மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸின் கணினி குற்ற விசாரணை பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக நைஜீரிய பிரஜைகள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர். 30, 58 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் பெண்ணொருவருக்கு வட்சப்பினூடாக பரிசொன்று கிடைக்கப்பெற்றுள்ளது எனக் கூறி, பரிசுப்பொதிக்கான படத்தை குறித்த பெண்ணின் வட்சப் இலக்கத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் பேங்கொக்கிலுள்ள வங்கி இலக்கத்துக்குப் பணத்தை வைப்பிலிடுமாறு குறித்த இருவரும் அந்தப் பெண்ணிடம் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக நைஜீரிய பிரஜைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.