கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாதி ஒருவரின் மோசமான செயல்: கம்பஹாவில் சம்பவம்
கொரோனா தொற்றாளராக அடையாளம் கண்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதி ஒருவர், அயல் வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட காணிப் பிரச்சினை வாக்கு வாதத்தின் இடையே, அப்பெண்ணின் முகத்தில் உமிழ்ந்ததாக கூறப்படும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கம்பஹா – கிரிந்திவல பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் அயல் வீட்டு பெண்ணினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொரோனா தொற்றாளரான தாதி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் முறைப்பாட்டில் அயல் வீட்டு பெண்ணினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறயினும் சம்பவம் இடம்பெற்ற உடனேயே பொலிஸ் நிலையத்தில் அயல் வீட்டு பெண் இது குறித்து முறையிட்டதாகவும், உடனடியாக அவருக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது, அயல் வீட்டு பெண் தொற்றாளராக அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் கூறினர்.
எவ்வாறாயினும் குறித்த அயல் வீட்டு பெண்ணையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த சுகாதார தரப்பு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், முறைப்பாட்டாளரான பெண், தாதி ஆகிய இருவரினதும் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிசார் கூறினர்.