நோர்வே அரசியலில் சிகரம் தொடும் ஈழத் தமிழ்ப் பெண் :சண் தவராஜா
ஸ்கன்டிநேவிய நாடுகளுள் ஒன்றான நோர்வேயில் செப்டெம்பர் 13ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் இடதுசாரிக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
8 வருடங்களாக வலதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சி இடதுசாரிகளின் கரங்களில் வந்ததைத் தொடர்ந்து, 1959ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் ஸ்கண்டிநேவிய நாடுகளான டென்மார்க், பின்லாந்து, சுவீடன், ஐஸ்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் இடதுசாரிகளின் ஆட்சி உருவாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 26.3 வீத வாக்குகளுடன் 48 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தொழிற்கட்சியின் தலைவர் யூனாஸ் கார் ஸ்ரோறே தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்தக் கட்சியோடு 28 ஆசனங்களைப் பெற்ற நடுநிலைக் கட்சியும், 13 ஆசனங்களைப் பெற்ற சோசலிச இடது கட்சியும் இணைந்து ஆட்சியமைக்க உள்ளன.
8 ஆசனங்களைப் பெற்ற செம்மைக் கட்சி, 3 ஆசனங்களைப் பெற்ற பசுமைக் கட்சி ஆகியன வெளியே இருந்து ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையில் 100 ஆசனங்களுடன், மிகவும் வலுவான நிலையில் ஒரு ஆட்சியை அமைக்கும் வல்லமையை தொழிற் கட்சி பெற்றுள்ளது.
கடந்த 8 வருடங்களாக தலைமை அமைச்சராக இருந்த ‘நோர்வேயின் இரும்புப் பெண்மணி’ என வர்ணிக்கப்பட்ட அர்னா சொல்பேர்க் அவர்களின் பழமைவாதக் கட்சி 20.4 வீத வாக்குகளுடன் 36 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. கடந்த முறையை விடவும் 9 ஆசனங்கள் குறைவாகவே இவர் சார்ந்த கட்சி பெற்றிருந்தாலும், நோர்வேயின் வரலாற்றில் அதிக காலம் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையுடன் இவர் பதவி விலகிச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயின் நாடாளுமன்றில் 169 ஆசனங்கள் உள்ளன. 19 பிராந்தியங்களைக் கொண்ட அந்த நாட்டில் நேரடி வாக்களிப்பு மூலம் 150 பேரும், பிராந்தியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் என்ற அடிப்படையில் 19 பேரும் தெரிவு செய்யப்படுவர். பிராந்தியக் கட்சிகளுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலான இந்த ஏற்பாட்டின் கீழ், குறித்த பிராந்தியத்தில் 4 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் கட்சிகள் கவனத்தில் கொள்ளப்பட்டு தெரிவு இடம்பெறும்.
மக்கள் தொகையின் அடிப்படையில் பிராந்தியம் ஒன்றில் இருந்து 4 முதல் 19 உறுப்பினர்கள் வரை தெரிவு செய்யப்படுவர். இம்முறை நடைபெற்ற தேர்தலில் 26 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. அதில் 10 கட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலாக தொழிற்கட்சியின் சார்பில் 48 உறுப்பினர்களும், புதிதாகத் தேர்தலில் போட்டியிட்ட நோயாளிகள் நலன்பேணும் கட்சியின் சார்பில் ஒரேயொரு உறுப்பினரும் தெரிவாகியுள்ளார்.
வாக்களிக்கத் தகுதியான 3,891,736 பேரில் 2,905,748 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்த வாக்காளர் தொகையில் 77.1 வீதம் ஆகும். கொரோனாப் பெருந் தொற்றுக் காலத்திலும் இத்தனை வீதமானோர் வாக்களித்தமை பெரிதாகப் பேசப்பட்டாலும், கடந்தமுறை நடைபெற்ற பொதுத் தேர்தலைவிடவும் வாக்களித்தோர் எண்ணிக்கை 1.1 வீதம் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற முடிந்த தேர்தலில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் தொழிற்கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்பட்டாலும் அதனை விட முக்கியமான விடயங்களும் இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ளன. கடந்த நாடாளுமன்றில் 45 வீதமாக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம் இந்த ஆண்டில் 47 வீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளை புலம் பெயர் பின்னணியைக் கொண்ட 11 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் ஈழத் தமிழரான ஹம்சாயினி குணரெட்ணம் என்பவரும் அடங்குகிறார்.
இலங்கைத் தீவில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றார்கள். அவர்கள் முத்திரை பதித்துவரும் துறைகளுள் அரசியலும் அடக்கம். குறிப்பாக புலம் பெயர் சமூகத்தின் இளைய தலைமுறையினர் உள்ளூர் அரசியலில் அதிகமாக அக்கறை காட்டி வருகின்றனர்.
கிராம, நகர மட்டங்களில் அரசியலில் ஈடுபாடு காட்டிவந்த இவர்கள், பின்னாளில் தேசிய அரசியலிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாக 2011 மே 2இல் கனடிய நாடாளுமன்றில் முதல் ஈழத் தமிழராக செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவு செய்யப்பட்டு புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். இவர் கனடாவில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமன்றி, இலங்கைக்கு வெளியே நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் புலம் பெயர் ஈழத் தமிழராகவும் சாதனை படைத்தார்.
இவரைத் தொடர்ந்து கரி ஆனந்தசங்கரி 2015 இல் கனடிய நாடாளுமன்ற உறுப்பினரானார். 2019இல் 2ஆவது தடவையாகவும் தெரிவான இவர் தற்போது வரை நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்து வருகின்றார். அத்துடன் பழங்குடி மக்கள் விவகாரத் துணை அமைச்சராகவும் உள்ளார்.
தனது மூன்றாவது வயதில் நோர்வேக்குப் புலம் பெயர்ந்த யாழ்ப்பாணம் கைதடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹம்சாயினி குணரெட்ணம் இளம் வயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். நோர்வே தொழிற் கட்சியின் ஊடாக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட ஹம்சி முதலில் நோர்வே மாநகர சபை உறுப்பினராகத் தெரிவானார். 2015 ஒக்ரோபர் 21ஆம் திகதி ஒஸ்லோ மாநகர சபையின் பிரதி மேயராகத் தெரிவான இவர் 2019 இல் மீண்டும் பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார். ஒஸ்லோ பிராந்தியத்துக்கான தேர்தல் பட்டியலில் இவரது பெயர் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோதே இவரின் வெற்றி பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பட்டியிலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது என்பது கட்சியிலும், சமூகத்திலும் இவருக்கு உள்ள செல்வாக்கைப் புலப்படுத்துவதாக உள்ளது.
2007 இல் தொழிற் கட்சியில் இளைஞர் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்ட ஹம்சி, வெகு விரைவிலேயே கட்சியில் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு விரைவிலேயே கட்சி இளைஞரணியின் ஒஸ்லோ தலைவராக உயர்ந்தார். 2011 யூலை 22இல் உற்றேயா தீவில் நடைபெற்ற தொழிற் கட்சியின் இளைஞர் முகாமில் ஹம்சாயினி குணரெட்ணம் பங்கு கொண்டிருந்த வேளையிலே, அந்த முகாம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானது. 69 பேர் கொல்லப்பட்டு 110 பேர் வரை காயங்களுக்கு இலக்கான இந்தத் தாக்குதலில் அவர் மயிரிழையில் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலில் அவர் தனது சகாக்கள் மற்றும் நண்பர்கள் பலரை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
நோர்வேயின் வரலாற்றில் முதலாவது ஈழத் தமிழராக நாடாளுமன்றில் நுழைகிறார் ஹம்சி. பெரும்பாலும் புதிய அரசில் அவருக்கு ஒரு அமைச்சர் பதவி கிட்டலாம் என ஊகங்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு அமைச்சர் பதவி அவருக்குக் கிட்டுமானால் புலம் பெயர் தமிழர்களில் தேசிய அரசாங்கம் ஒன்றில் அமைச்சரான முதல் தமிழர் என்ற பெருமையை அவர் பெறக் கூடும்.
பெண்களை வீட்டில் அடைத்து வைக்கும் பழைய பண்பாட்டை இன்னும் பேண விரும்பும் தமிழர்களுக்கு இந்த இடத்தில் ஒன்றை நினைவு படுத்துதல் பொருத்தமாக இருக்கலாம். “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? ” என்ற வழியில் வந்த ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்னான காலம் முதல் புலம் பெயர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற கனடாவிலும், நோர்வேயிலும் பெண்களால் முடிந்திருக்கின்றது என்றால் மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொழுத்துவதற்கான காலம் நெருங்கி விட்டது என்பதை இனியாவது புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதில் தவறில்லை அல்லவா?