தீர்வு கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் அரசின் மிரட்டல்களுக்கு அடிபணியவேமாட்டோம்.
“அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க முன்னணியின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரைக்கும் எமது தொழிற்சங்கப் போராட்டம் தொடரும். அரசின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணியமாட்டோம்.”
இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாம் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்து 71 நாட்களாகின்றன. எந்த மாற்றமுமின்றி தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி தீர்மானித்து அது தொடர்பில் அறிவிப்பை விடுத்து நிகழ்தகை கற்பித்தலிருந்து விலகினோம்.
அதேபோன்று ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்காது இருந்தால் அந்தப் பரீட்சைகளுக்கான கடமைகளில் ஈடுபடுவதற்கு விண்ணப்பிக்காது இருத்தல், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விண்ணப்பிக்காது இருத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை எடுத்தோம்.
இவ்வாறு எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் எவ்வித மாற்றங்களுமின்றி முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
எனினும், கடந்த வாரம் அதிபர்கள் சங்கம் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட குழுவொன்று, முதல் முறையாக விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவுள்ளதாக அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் நேற்றும் மீண்டும் ஓர் அறிவிப்பை விடுத்தார்.
நாம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க முன்னணியே இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றது.
எனவே, ஒவ்வோர் இடங்களில் இருந்துகொண்டு ஆட்சியாளர்களின் தேவைக்காகக் கருத்துரைப்பவர்களின் கருத்துகளுக்கு செவிமடுக்காதீர்கள் என்று நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றார்.