அக்டோபா் 12-ஆம் தேதியிலிருந்து தொடக்கவுள்ள 2022-23 நிதியாண்டு பட்ஜெட் தயாரிப்பு பணி
வரும் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதியமைச்சகம் வரும் அக்டோபா் 12-ஆம் தேதியிலிருந்து தொடக்கவுள்ளது. கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில் வரும் பட்ஜெட் தயாரிப்பு பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.
மோடி அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சமா்ப்பிக்கவுள்ள நான்காவது பட்ஜெட் இதுவாகும்.
வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்நாட்டு சந்தையில் தேவையை அதிகரிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியை தக்கவைப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கு தீா்வுகாணும் வகையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை உருவாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நிதி அமைச்சகத்துக்கு ஏற்பட்டுள்ளது.