73 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்தத் திட்டம்.
இலங்கையில் ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் வாடிக்கையாருக்கான நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தயாராகி வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நுகர்வோரிடமிருந்து பெறப்படவேண்டிய தொகை 145 கோடி ரூபாவாகும். எனினும், நுகர்வோர் தமது பட்டியல் கொடுப்பனவைச் செலுத்தாததால் சபை 800 கோடி ரூபாவை இழந்துள்ளது.
6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணங்களைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதன் பின் சுமார் 100 வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியால், நாடு முழுவதும் உள்ள பல ஹோட்டல்களும் நீர் கட்டணத்தைச் செலுத்தவில்லை.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு மாதந்தோறும் 2 பில்லியன் ரூபா செலவு ஏற்படுவதால் வாடிக்கையாளர்கள் தமது கட்டணங்களை விரைவாகச் செலுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.