தமிழ் அரசியல் கைதிகளுக்குக் கொலை அச்சுறுத்தல்: நாளை சபையில் விசேட பிரேரணை!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் நாளை சபையில் விசேட பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த லொஹான் ரத்வத்த, தனது பதவி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த 12ஆம் திகதி மாலை 6 மணியளவில் நிறை போதைக்குள்ளான நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் கொண்டு வந்து நிறுத்துமாறு பணித்திருந்தார்.
அதற்கமைய அவருக்கு முன் முழந்தாழிட்டு நிறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளது தலையில் அவர் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்திருதார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினை குறித்து நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டம் 27 (2) இன் கீழ் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலதத்தால் சபாநாயகரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை நாளை சபையில் முன்வைக்கப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.