அரச கூட்டுக்குள் மீண்டும் மோதல்! – கோட்டாவின் வருகைக்காகப் பங்காளிகள் காத்திருப்பு.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு நிதி அமைச்சால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு பங்காளிக் கட்சிகள் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. எனினும், இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுவிட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, எமது மக்கள் சக்தி, லங்கா சமசமாஜக்கட்சி ஆகியன இலங்கை கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முக்கித்துவமிக்க சந்திப்பை நடத்தியிருந்தன.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, அத்துரலிய ரத்தன தேரர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் அவரைச் சந்தித்து இது சம்பந்தமாகப் பேச்சு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் இதர கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்குவதற்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பா என்பது தொடர்பில் அக்கட்சிகளின் தலைவர்கள் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. எமது நடவடிக்கை என்னவென்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
அதுமட்டுமல்ல கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு நடந்த கதியே இதற்கு நடைபெறும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.