விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதை ஏற்கவே முடியாது! த.மு.கூ. சாட்சியம்.
“இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாண சபை, நாடாளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்றி, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களையும் ஒழித்து, மாகாண சபை, நாடாளுமன்ற மக்கள் மன்றங்களை மேலும் பலவீனமாக்கி நாட்டை சர்வதிகார போக்கில் மென்மேலும் கொண்டு செல்ல ஒருபோதும் இணங்கவோ, இடமளிக்கவோ முடியாது.
இந்த வரலாற்று தவறு உங்கள் தலைமையில் ஏற்பட்டது என்ற பழிச்சொல் உங்கள் மீது விழாமல் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கவனமாகச் செயற்பட வேண்டும்.”
இவ்வாறு தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு நாடாளுமன்ற வளாகத்தில் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியபோது, த.மு.கூ. தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வி. இராதாகிருஷ்ணன், எம்.பிக்களான வேலு குமார், உதயகுமார் ஆகியோர் அடங்கிய கூட்டணி தூதுக்குழுவினர் சமூகமளித்தனர். அதன்போது கூட்டணியின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது:-
“நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த தேர்தல் முறை மாற்றம் எமது ஆட்சிகாலத்தில் கலப்பு முறைக்கு பரீட்சார்த்தமாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நிலையான ஆட்சிக்கு வழி காட்டவில்லை. அத்துடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடெங்கும் ஏறக்குறைய அறுபது முதல் எழுபது விகிதம் அதிகரித்தது. ஆனாலும், குழப்ப நிலைமையே ஏற்பட்டது.
இந்நிலையில், இதே விதமான குழப்ப நிலைமையை மாகாண சபை, நாடாளுமன்றங்களிலும் ஏற்படுத்தி இந்நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வேண்டாம். எமக்கு முன் சாட்சியம் அளித்த ஒரு இன்னொரு கட்சியின் பிரதிநிதி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்தால், அவர்கள் கடந்த காலங்களை போல் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் .
அது உண்மை. ஆனால், அந்த நிலைமை வடக்கில் மட்டுமல்ல. தெற்கிலும் ஏற்பட்டது என்பதை நான் இந்த குழுவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பாராளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவங்களை பெற முடியாத நிலையில், தென்னிலங்கையிலும் சிங்கள இளையோர் இப்படி ஆயுதம் தூக்கினார்கள். இன்று விகிதாசார முறையின் கீழ்தான் இந்நிலைமை மாறியது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனதான், உள்ளூராட்சி, மாகாணசபை, பாராளுமன்றங்களுக்கு விகிதாசார தேர்தல் முறைமையையும் கொண்டு வந்து அறிமுகம் செய்தார். ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சில பிழையான செய்கைகளுக்கு மத்தியில் அவரது தீர்க்கதரிசனமிக்க சரியான செய்கை இதுவாகும்.
இன்று நீங்கள் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இன்னமும் பலமிக்கதாக 20ம் திருத்தத்தின் மூலம் மாற்றியுள்ளீர்கள். இது உண்மை. எனவே ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.
இலங்கையின் அனைத்து இன மற்றும் சமூக குழுவினர்களும் பிரதிநிதித்துவம் செய்ய இடந்தரும் வண்ணமும், பெரிய, சிறிய கட்சிகள் தாம் பெறுகின்ற வாக்கு தொகைகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்கள் பெரும் வண்ணமும், உள்ளூராட்சி, மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் நாடாளுமன்றமும், மாகாண சபைகளும் செயற்பட முடியும். இதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு” – என்றார்.