வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! அமைச்சர் டலஸ் உறுதி.

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் முன்வைத்த வாய்மூலமான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்ததாவது:-
“கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும்.
நாடு முழுவதும் தபால் மற்றும் உப தபாலகங்களை அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் 2020 – 2021 மற்றும் எதிர்வரும் வருடங்களிலும் கட்டட நிர்மாணங்கள் இடம்பெறாத போதிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது வடக்கு மாகாணத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்” – என்றார்.